×

30 நிமிடங்களில் கண்டறியலாம் தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் இன்று முதல் கொரோனா பரிசோதனை: சீனாவிடம் 4 லட்சம் கிட் ஆர்டர்

சென்னை: கொரோனாவை 30 நிமிடத்தில் கண்டறியக்கூடிய ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை செய்யும் திட்டம் இன்று முதல் தமிழகத்தில் தொடங்குகிறது.  உடனுக்குடன் முடிவுகள் கிடைப்பதால் சமூக பரவலை தடுக்க உதவும் என்பதற்காக, 4 லட்சம் கிட்கள் வாங்க தமிழக அரசு சீனாவிடம் ஆர்டர் கொடுத்துள்ளது.   கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், தமிழகத்தில் இந்த நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. இதனால் நோய் தொற்றை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  இந்நோய் தொற்றை கட்டுப்படுத்துவது என்பது ஒரு சவாலான பணி.

யாருக்கு இந்த தொற்று இருக்கிறது என்பதை கண்டறிந்தால் மட்டுமே அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். மற்றவர்களிடம் இருந்து அவர்களை தனிமைப்படுத்த முடியும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 19 கொரோனா பரிசோதனை கூடங்கள் மட்டுமே உள்ளன.  இந்த பரிசோதனை மையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 700 டெஸ்ட்கள் வரை மட்டுமே எடுக்க முடிகிறது. அதிலும் பரிசோதனை முடிவுகள் தெரிய காலதாமதமாகிறது. இதனால் நோய் தொற்றுள்ளவர்களை தனிமைப்படுத்துவதில் கடினமான நிலை உள்ளது. சீனாவில், இந்நோய் தொற்றுள்ளவர்களை உடனடியாக கண்டுபிடித்ததால் மட்டுமே இந்த நோய் தொற்றை உடனடியாக கட்டுப்படுத்த முடிந்ததாக கூறப்படுகிறது.

இதற்காக 30 நிமிடத்தில் கண்டறியக்கூடிய ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கருவி மூலம் பரிசோதனை செய்யும் போது மிக வேகமாக கொரோனா தொற்று உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். தற்போது இந்த கருவிகளை தமிழகத்தில் பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 ஏற்கனவே ஒரு லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சாதாரண அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு பரிசோதனை செய்வதில்லை. முழுமையாக தெரிந்த பின்பே டெஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தமிழக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிகுறிகளுடன் யார் வந்து கேட்டாலும் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த சூழ்நிலையில், வெறும் 30 நிமிடங்களில் கொரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என்று கண்டறியக்கூடிய ரேபிட் டெஸ்ட் கிட் சீனாவிடம் இருந்து வாங்க தமிழக அரசு முடிவு செய்தது.

 அதன் அடிப்படையில் 4 லட்சம் கிட் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டது. முதல்கட்டமாக 50ஆயிரம் கிட் நேற்றிரவு தமிழகம் வந்தடைந்தது. இந்த கிட்கள் அனைத்தும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கருவிகள் மூலம் இன்று அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதனால் கொரோனா தொற்று குறித்த முடிவுகள் உடனுக்குடன் தெரிந்துவிடும். கொரோனா அதிகம் பாதித்த இடங்களுக்கு இந்த கருவிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.  சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் இந்த கருவி மூலம் பரிசோதனை செய்யப்படும் என தெரிகிறது. இதன் மூலம் சமூக பரவலை கண்டறிய வாய்ப்புள்ளது. அண்ணா பல்கலைக்கழக ஜி.ஐ.எஸ் மேப்பிங் மூலமாக எந்தெந்த பகுதி மக்களுக்கு துரித பரிசோதனைகள் தேவைப்படும் என்பது கண்டறியப்பட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Coronation test ,Tamil Nadu ,Rapid , Tamil Nadu, Rapid Test, Corona, China
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...