உபி.யில் தாசில்தாரை தாக்கிய பாஜ எம்பி மீது நடவடிக்கை: மாயாவதி கோரிக்கை

உத்தர பிரதேச மாநிலம், கன்னோஜ் தொகுதி பாஜ எம்பி சுப்ராத் பதக். இவர், இப்பகுதியை ேசர்ந்த தலித் இனத்தை சேர்ந்த தாசில்தார் அரவிந்த் குமாரை தாக்கியுள்ளார். சில திட்டங்களுக்கு விதியை மீறி நிதி ஒதுக்க வேண்டும் என்று தாசில்தாரை சுப்ராத் பதாக் வலியுறுத்தியுள்ளார். அதை ஏற்க மறுத்ததால் தாசில்தாரை போனில் கடுமையாக திட்டிய எம்பி., பின்னர் தனது ஆதரவாளர்களுடன் நேரில் சென்று தாக்கியுள்ளார். இது தொடர்பாக எம்பி பதக் கூறுகையில், `‘ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு முறையாக உணவு வழங்கவில்லை என்று எனக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இது தொடர்பாக தாசில்தாரிடம் கேட்டபோது அவர் என்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார். எனது ஆதரவாளர்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டதால் அவரை அடித்தோம்,’’ என்றார்.

இச்சம்பவம் பற்றி உபி. முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ பணியில் நேர்மையாக நடந்து கொண்ட தலித் தாசில்தாரை தாக்கி தவறாக நடந்து கொண்ட பாஜ எம்பி.யின் செயல் வெட்கக்கேடானது. இவரை சிறைக்கு அனுப்பாமல் வெளியே விட்டுள்ளனர். அவர் மீது முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது,’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>