×

வேளச்சேரி வணிக வளாகத்திற்கு சென்ற சென்னை தம்பதிக்கு கொரோனா பாதிப்பு: 2 குழந்தைகள் தீவிர கண்காணிப்பு

சென்னை: சென்னையில் தம்பதிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் இரண்டு குழந்தைகளுக்கும் பரிதோதனை நடந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேளச்சேரியில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு சென்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று பொதுமக்களிடம் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பது குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.  கடந்த மாதம் வேளச்சேரியில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் துணிக்கடையில் பணியாற்றிய பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து அந்த வளாகத்தில் பணியாற்றிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கணிகாணிக்கப்பட்டனர். இதில் அதே கடையில் பணியாற்றிய மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட வணிக வளாகத்திற்கு மார்ச் 10ம் தேதி முதல் மார்ச் 17ம் தேதிக்குள் சென்று வந்தவர்கள் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.  இந்நிலையில், சென்னை சவுகார்பேட்டை மிண்ட் தெருவை சேர்ந்த கணவன், மனைவி ஆகியோர் காய்ச்சல் காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தம்பதிகள் இருவரையும் டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது, அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தம்பதிகளின் இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு ஆளான ஆண் நபர் ஊரடங்கு உத்தரவிற்கு முன்பாக, வியாபாரம் தொடர்பாக டெல்லி சென்று திரும்பியுள்ளார் என்பதும், பின்னர் அவர் வேளச்சேரியில் உள்ள தனியார் வணிக வளாகத்திற்கு சென்றுவிட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இவருக்கு எங்கிருந்து கொரோனா தொற்று ஏற்பட்டது எனவும், யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சென்னை மாநகராட்சி 5வது மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள், மிண்ட் தெருவை மூடி சீல்வைத்தனர். அப்பகுதியை தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்து அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுபோல், நேற்று மண்ணடி மரைக்கான் தெருவில் டெல்லி சென்று திரும்பிய 2 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் சாலைகள் சீல்வைக்கப்பட்டு தீவிரமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Tags : Chennai ,shopping complex ,Velachery ,children , Velachery Shopping Complex, Chennai Couples, Corona, 2 children
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...