×

நம்ப வச்சு ஏமாத்திட்டானேய்யா.... குவார்ட்டர்னு சொல்லி ரூ500க்கு நில வேம்பு கசாயத்தை கொடுத்துட்டாங்களே.. திருச்சியை திக்குமுக்காட வைக்கும் கள்ளச்சந்தை வியாபாரிகள்

திருச்சி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் மார்ச் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் குடிமகன்கள் ஒரு வாரத்துக்கு தேவையான சரக்குகளை வாங்கி இருப்பு வைத்திருந்தனர். 2 நாள் கழித்து ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு என மத்திய அரசு அறிவித்தது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தாலும், வாங்கி இருப்பு வைத்திருந்த சரக்குகளை குடித்தனர். இருப்பு வைத்திருந்த சரக்குகள் தீர்ந்த நிலையில், தற்போது சரக்குகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். திருச்சியில் ராம்ஜிநகர், உறையூர், கே.கே.நகர் பகுதிகளில் சிலர் ஏற்கனவே சரக்குகளை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். அதாவது ரூ110க்கு விற்ற குவார்ட்டர் ரூ600 ஆக அதிகரித்து விட்டது. பணம் வைத்திருப்போர், அந்த விலைக்கும் வாங்கி அருந்துகின்றனர்.

ஆனால் தினமும் மது அருந்தும் பழக்கம் உடைய கூலி தொழிலாளர்கள் பாடுதான் திண்டாட்டமாக உள்ளது. இதனிடையே கள்ள மார்க்கெட்டில் விற்பவர்களிடமும் சரக்குகள் தீர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் மது கிடைக்காமல் குடிமகன்கள் திண்டாடி வருகின்றனர். ஆங்காங்கே மதுக்கடைகளை உடைத்து பாட்டில்களை திருடும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதனால் திருச்சி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பாற்ற இடங்களில் உள்ள கடைகளில் இருந்து மது பாட்டில்களை எடுத்துச்சென்று பாதுகாப்பான இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைத்துள்ளனர். ஆற்றங்கரையோரம், வாய்க்கால் ஓரம், வயல்களில் சிலர் சொந்தமாக ஊறல் போட்டு கள்ளச்சாராயம் காய்ச்சும் பணியில் இறங்கி விட்டனர். முத்துப்பேட்டை அருகே பாமணி ஆற்றங்கரையில் நேற்று கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் போலீசை கண்டதும் ஓடி விட்டது.

மது கிடைக்காத விரக்தியில் அறந்தாங்கியை சேர்ந்த டிரைவர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இப்படி மதுவுக்காக குடிமகன்கள் அல்லாடி வரும் நிலையில், வேறு வழியின்றி சிலர் மாற்று போதையை நாட துவங்கி உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சேவிங் லோஷனை சோடாவில் ஊற்றி குடித்தால் போதை வரும் என யாரோ கூறியதை கேட்டு அதை குடித்த 3 பேர் பலியாகினர். நேற்று பிரபல நடிகை மனோரமா மகன் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. குடிமகன்கள் இப்படி மதுவுக்காக அல்லாடுவதை பயன்படுத்தி சிலர் மது எனக்கூறி கசாயத்தை விற்று காசு பார்க்கும் தில்லாலங்கடி வேலையில் இறங்கி உள்ளனர். அதாவது திருச்சியில் காலி சரக்கு பாட்டில்களில் டெங்கு ஒழிப்புக்கு பயன்படுத்தியசித்த மருந்தான நிலவேம்பு கசாய பொடியை தண்ணீரில் கலந்து அதனை குவார்ட்டர் பாட்டில்கள் அடைத்து விற்று ஏமாற்றி வருகின்றனர்.

திருச்சி உறையூர் கோணக்கரை பகுதியில் ஆள் அரவம் இல்லாத இடத்தில் இரவில் சரக்கு விற்கப்படுவதாக குடிமகன்களுக்கு தகவல் கிடைக்கிறது. இதையடுத்து குடிமகன்கள் அங்கு படையெடுக்கின்றனர். கும் இருட்டில் சரக்கு வாங்க வருபவர்களை கண்டறிந்து சில அடி தூரத்தில் நிற்கும் ஒருவர் அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து பின் சரக்கு வாங்க அனுமதிக்கிறார். முண்டியடித்து ஓடும் குடிமகன்கள் குவார்ட்டர் ரூ.500 என கூறுவதையும் பொருட்படுத்தாமல் ஒருவர் 10 முதல் 15 பாட்டில்கள் வரை வாங்குகிறார். இருட்டில் சரக்குகளை வாங்கி இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பதுக்கிக்கொள்கின்றனர். ஆனால் யாரையும் அங்கு குடிக்க அனுமதிப்பதில்லை. இப்படி பாட்டில்கள் விற்றுக்கொண்டிருக்கும் போதே போலீஸ் வருகிறது என பாட்டில் விற்பவரின் ஆதரவாளர் ஒருவர் கூச்சலிடுகிறார். இதையடுத்து அங்கு பாட்டில் விற்றவர்கள், வாங்க வந்தவர்கள் அனைவரும் எஸ்கேக் ஆகின்றனர்.

அந்த இடத்தில் யாரும் பாட்டிலை திறந்து பார்த்து விடக்கூடாது என்பதால் போலீஸ் வந்து விட்டது என்ற டெக்னிக்கை பயன்படுத்து அனைவரையும் விரட்டி விடுகின்றனர். பின்னர் சரக்கு வாங்கியவர்கள் தங்களின் இருப்பிடத்திற்கு சென்ற பின், ஆசையாக சரக்கு பாட்டிலை திறந்து குடித்தால் அவர்களுக்கு போதை ஏறுவதில்லை. மேலும் அவர்களுக்கு மதுவுக்கே உண்டான கிக் இல்லாதல், ஏதோ கசாயத்தை குடித்தது போல் இருந்தது. பின்னர் பாட்டில்களில் இருந்தமீதி சரக்கை சோதித்து பார்த்த போது தான், அது நில வேம்பு கசாயம் என தெரியவந்தது. ஏற்கனவே சரக்கு கிடைக்காத விரக்தியில் இருக்கும் குடிமகன்கள் பணம் இழப்பு, கசாயத்தால் ஏமாற்றம் என நொந்து நூடுல்ஸ் ஆகின்றனர். கசாயத்தால் ஏமாந்த சிலர் பிரம்மை பிடித்தது போல் திரிகின்றனர். இலவசமாக கிடைக்கும் இந்த மூலிகை பவுடரையா ஆயிரக்கணக்கில் கொடுத்து வாங்கினோம் என தலையில் அடித்து கொள்கின்றனர்.

இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை போல் ஏமாந்துவிடாமல் இருக்க சக நண்பர்களிடம் மது வாங்கினால் அங்கேயே திறந்து சோதித்து கொள்ளுங்கள் என அறிவுரை வழங்குகின்றனர். போலி மது மற்றம் கசாயத்தை கொடுத்து ஏமாற்றும் கும்பலை போலீசார் பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடிமகன்கள் ஆதங்கப்படுகின்றனர்.

Tags : Quarter, Land Neem, Trichy, counterfeit traders
× RELATED காலாவதியான பிஸ்கட் பறிமுதல்: அதிகாரிகள் விசாரணை