×

டாஸ்மாக்கில் கொள்ளை போன மதுபாட்டில்கள் மக்காச்சோள தட்டைகளுக்கு இடையே பெட்டி, பெட்டியாக பதுக்கி வைப்பு: சூப்பர்வைசர் உள்பட 8 பேர் கைது

பெரம்பலூர்: கொள்ளை போன டாஸ்மாக் மதுபான பாட்டில்களை தேடினால், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, அறுவடை செய்த மக்காச்சோள தட்டைகளுக்கிடையே பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டி, பெட்டியாக மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. கடந்த 6ம்தேதி இரவு பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உப்போடை பகுதியில் காட்டின் நடுவே உள்ள அரசு டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து 20கேஸ் பெட்டி மதுபாட்டில்களும், ரேக்குகளில் அடுக்கியிருந்த புல் பாட்டில்களும் மர்ம நபர்களால் ெகாள்ளை போனது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.போலீஸ் மோப்பநாய் சென்ற தடங்களை வைத்தும், கோனேரிப்பாளையம் பகுதி சிசி-டிவி பதிவுகளை கொண்டும் அப்பகுதி வயல்களில் தேடியபோது அறுவடைக்கு பிறகு அள்ளிக்கட்டி கூம்பாக வைத்திருந்த மக்காச்சோள தக்கைகளுக்கு நடுவே, கொட்டி வைத்திருந்த மக்காச்சோள கருது சக்கைகளுக்கு நடுவே 28 பெட்டி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

கடையில் கொள்ளை போனதைவிட இங்கு கிடைத்திருப்பது அதிகமாகும். இதனால் புத்தம்புது அட்டை பெட்டிகளில் கைப்பற்றிய டாஸ்மாக் மதுபாட்டில்கள் மற்றொரு கடையிலிருந்து டாஸ்மாக் ஊழியர் துணையுடன் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டதா அல்லது இவைகளும் வெளியே தெரியாத மற்றொரு கடையில் கொள்ளையடிக்கப்பட்டதா, போலி மதுபானம் தயாரிப்பாளர்களிடமிருந்து ஊரடங்கு சமயத்தில் கூடுதல் விலை வைத்து விற்கத் திட்டமிட்டு கொண்டு வந்து பதுக்கி வைக்கப்பட்டதா என அச்சம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து 28 பெட்டி மதுபாட்டில்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தவுடன் அரசு மது பான பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ய வேண்டி, ஆத்தூர் ரோட்டில் உள்ள 2வது டா ஸ்மாக் கடை சூப்பர்வைசரான, திருச்சி, நம்பர்-1 டோல்கேட் செல்வேந்திரன்(50), கடை சேல்ஸ்மேன்கள் பெரம்பலூர் வெங்கடேசபுரம் அழகுவேல்(46), குன்னம் தாலுகா அந்தூர் முத்துசாமி(43)ஆகிய 3 பேர்களும் மதுபான பெட்டிகளை, கை. களத்தூர் சேட்டு(எ) ராஜமாணிக்கம் (43) என்பவரிடம் கொடுத்து விற்பனை செய்ய, கோனேரிப்பாளையம் கருப்பையா கோவிலருகே வயலில் பதுக்கி வைத்துள்ளனர்.

இவர்களுக்கு உதவியாக கோனேரிபாளையத்தை சேர்ந்த மஞ்சு என்கிற தீபக்(29), சிலம்பரசன்(33), பெரம்பலூர் வடக்குமாதவி ரோடு கார்த்திகேயன் (27), பெரம்பலூர் ஆலம்பாடி ரோடு சமத்துவபுரம் பிரவீன்குமார்(25) ஆகியோர் வேலை செய்துள்ளதையறிந்து 8 நபர்களையும் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சுப்பையா கைது செய்து விசாரித்து வருகிறார்.



Tags : supervisor ,persons , brewed ,Tasmaq, 8 persons ,supervisor ,arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...