கிருஷ்ணகிரி: ஊரடங்கு உத்தரவால் கடைகள் மூடப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி அருகே வெட்ட வெளியில் சவரத் தொழிலாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு சிகை அலங்காரம் செய்கின்றனர். கொரோனா வைரசின் தாக்கம் வேகமாக பரவி வருவதால், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி அடுத்த மேகலசின்னம்பள்ளியில் உள்ள சலூன் கடைகளை மூடும்படி போலீசார் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த சவர தொழிலாளர்கள், தோட்டத்திற்கு சென்று அங்கு நாற்காலி போட்டு தங்கள் வாடிக்கையாளர்களை வரவழைத்து சிகை அலங்காரம் செய்து வருகின்றனர். சவர தொழிலாளர்கள், தங்களது முகத்தை கைகுட்டையால் மூடிக்கொண்டு, வாடிக்கையாளர்களிடம் முகம் பார்க்கும் கண்ணாடியை கொடுத்து, சிகை அலங்காரம் செய்கின்றனர். உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து, தங்கள் பணியை செய்யும் சவரத் தொழிலாளர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.