×

பேய்க்குளத்தில் உரிய விலையின்றி விளைநிலத்திலேயே அழிக்கப்படும் காய்கறிகள்: வேளாண் துறை கவனிக்குமா?

சாத்தான்குளம்: பேய்க்குளம் பகுதியில் உரிய விலையின்றி தக்காளி, மிளகாய், கத்தரி உள்ளிட்ட காய்கறிகள் விளைநிலத்திலேயே அழிக்கப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த ஊரடங்கு வரும் 14ம் தேதி வரை அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதியிலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சாத்தான்குளம் அடுத்த பேய்க்குளம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய், தக்காளி, கத்தரிக்காய் பயிர்கள் தற்போது நன்றாக விளைந்துள்ளன. இவ்வாறு விளைச்சலான காய்கறிகளை ஊரடங்கால் மார்க்கெட்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக இப்பகுதியில்  விளைந்த காய்கறிகளை சரக்கு வாகனங்கள் மூலம் நாகர்கோவில் வடசேரி மார்க்கெட்டிற்கு கொண்டு செல்வர்.

தற்போது பெரும் சிரமத்திற்கிடையே காய்கறிகளை கொண்டு செல்லும் விவசாயிகளிடம் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். தற்போது தக்காளி மற்றும் மிளகாய் கிலோ ரூ.4, கத்தரி கிலோ ரூ.8 வீதம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், இவற்றை வெளியே சில்லறை விலைக்கு ரூ.40க்கும், மொத்த விலைக்கு ரூ.25 வரையிலும் விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பறி கூலி, வாகன வாடகை போன்றவற்றிற்கு கூட கட்டுப்படியாகாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். வேறு வழியின்றி விளைந்த மிளகாய், கத்தரி, தக்காளி போன்றவற்றை பறிக்காமல் செடியிலேயே விட்டு விட்டனர். எனவே விளைநிலங்களுக்கு நேரடியாக வந்து இவற்றை கொள்முதல் செய்ய வேளாண்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என விவசாயிகள்
வலியுறுத்தியுள்ளனர்.

நிரந்தரத் தீர்வு
இதுகுறித்து பேய்க்குளம் விவசாயிகள் சங்க செயலாளர் முருகேசன் கூறுகையில், ‘‘பேய்க்குளம் பகுதியில் ஏராளமான ஏக்கர் பரப்பில் மிளகாய், தக்காளி, கத்தரி சாகுபடி செய்துள்ளோம். நன்றாக விளைச்சலான போதும் உரிய விலை இல்லை. இதையடுத்து பலர் பயிர்களை வயலிலேயே அழித்து விட்டனர்.. மீதம் அறுவடை செய்தவற்றை எப்படி விற்பனை செய்வது என்பதில் குழப்பம் நிலவுகிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.

Tags : Department of Agriculture ,Department of Agriculture Care , right, price,Farmland,Department, Agriculture,
× RELATED வேளாண் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்