கொள்ளிடம்: கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கவும், போலீசில் ஒப்படைக்கவும் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து இரவு நேரங்களில் கிராமக் கட்டுப்பாட்டை மீறி தொடர்ந்து நடைபெறும் மணல் திருட்டை நிறுத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் கனகராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் அமுதாசீனுவாசன் உள்ளிட்டோர் நேற்று அதிகாலை கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடுபவர்களை கையும் களவுமாக பிடிக்க ஆற்றில் இறங்கி சென்றனர்.அப்போது மணல் திருடி சாக்கு பைகளில் மூட்டைகளாக கட்டிக்கொண்டிருந்த மணல் கொள்ளையர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர்.
அப்போது அங்கு தயார் நிலையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 100 மணல் மூட்டைகளை கிழித்து மணலை மீண்டும் ஆற்றில் கொட்டினர். ஆற்றிலிருந்து எடுத்து சில இடங்களில் பதுக்கி வைத்திருந்த மணல்மூட்டைகளையும் கண்டுபிடித்து கீழே கொட்டினர். சந்தப்படுகை கிராம மக்கள் சார்பில் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவின் படி, சந்தப்படுகை கிராமப்பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் யாராவது மணல் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் மணல் திருடியவர்களை பிடித்து கொள்ளிடம் காவல்நிலையத்தில் ஒப்படைப்பது என்றும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் சந்தப்படுகையிலிருந்து வெளியூருக்கு தினந்தோறும் காய்கறிகள் விற்பனை செய்து விட்டு மாலையில் திரும்பும் போது குளித்த பிறகுதான் கிராமத்துக்குள் வரவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.