×

குமரி மாவட்டத்தில் கொரோனா கவச உடை தயாரிக்கும் தீயணைப்பு துறை : 500 க்கும் மேற்பட்ட ஊர்களில் கிருமி நாசினி தெளிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தீயணைப்பு துறை சார்பிலும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும் கொரோனா கவச உடை தயாரிக்கும் பணியும் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குலசேகரம், குழித்துறை, குளச்சல், கொல்லங்கோடு உள்பட 7 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இதில் நாகர்கோவிலில் 2 தீயணைப்பு வண்டியிலும், மற்ற இடங்களில் தலா 1 தீயணைப்பு வண்டியிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு வண்டிக்கு 4 தீயணைப்பு வீரர்கள் வீதம், சுழற்சி முறையில் பணியாற்றுகிறார்கள். குறிப்பாக கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் 8 கி.மீ. சுற்றி உள்ள கட்டிடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடக்கின்றன. நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை பகுதியில் 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதியை சுற்றி உள்ள சுசீந்திரம், பறக்கை உள்ளிட்ட பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று வரை 500க்கும் மேற்பட்ட இடங்களில் கிருமி நாசினி தெளித்துள்ளனர். உயரமான கட்டிடங்கள், கோபுரங்களில் மருந்து தெளிக்கும் பணியும் நடைபெற்றது.

இது தவிர முககவசங்கள் தயாரித்து பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களுக்கும் தீயணைப்பு துறை சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபடும் தீயணைப்பு பணியாளர்களுக்கு வைரஸ் பரவாமல் இருக்க நவீன உடை தயாரிப்பு பணி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் நடந்து வருகிறது. 5 தீயணைப்பு வீரர்கள் இந்த கவச உடை தையல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி சரவணபாபு மேற்பார்வையில் இந்த பணிகள் நடக்கின்றன. முதற்கட்டமாக 50 கவச உடைகள் தயாராகின்றன. இதற்கான துணி ரகங்கள் வெளி மார்க்கெட்டில் வாங்கப்பட்டுள்ளன. முற்கட்டாக தயாரிக்கப்பட்ட 5 உடைகள், தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்பட்டன. மிகவும் பாதுகாப்பான முறையில் இந்த கவச உடைகள் அமைந்துள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கவச உடைகள் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

Tags : fire department ,district ,Corona ,towns ,Kumari ,Kumari District Prepare Fire Department , Corona ,rmored, dress, Kumari, towns
× RELATED விஷ வண்டுகள் அழிப்பு