×

வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்க வேண்டும்: அனைத்து கட்சி கூட்டத்தில் டி.ஆர்.பாலு கோரிக்கை

சென்னை: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ₹10 ஆயிரம் வழங்குங்கள் என்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் டி.ஆர்..பாலு, பிரதமரிடம் கேள்வி எழுப்பினார். இந்தியா முழுவதும் ெகாரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் மக்கள் வருமானம் இல்லாமல் முடங்கி கிடக்கின்றனர். பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் 5க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கொண்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். தி.நகரில் உள்ள வீட்டிலிருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.பின்னர் அனைத்து கட்சி கூட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து, டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது:உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் நடந்து வரும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் தெரிந்து கொண்டு, பொதுமக்களையும் சந்தித்து அவர்கள் தேவைகளை நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அரசியல் விரோதங்கள், குரோதங்களை எல்லாம் கடந்து மனமாச்சரியங்களை  எல்லாம் மறந்து மத்திய, மாநில அரசுகளுக்கு நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து பணியாற்ற மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார் என்பதை பிரதமரிடம் சொன்னேன். நான் அனைத்தையும் பிரதமர் குறிப்பெடுத்து கொண்டார். தமிழகத்தில் இருந்து ஈரான் நாட்டுக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்ற 300 பேரை மீட்கவும் வலியுறுத்தினேன். இதுபோன்ற மோசமான சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கும் போது, புதிய நாடாளுமன்ற கட்டிடம் ₹20ஆயிரம் கோடியில் கட்டப் போவதாக சொல்லியிருக்கிறீர்கள். அது தேவையா என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். அதை இப்போது கட்டக் கூடாது என்பதை நாசூக்காக சொன்னேன். தற்போது ஏழை, எளிய மக்களுக்கு நீங்கள் அறிவித்துள்ள நிதி போதவே போதாது என்பதை  சொன்னேன். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ₹10ஆயிரம் கொடுங்கள். ஒரே நேரத்தில் கொடுக்க முடியாவிட்டால் இரண்டு தவணையாக கொடுங்கள். அதேபோன்று நடுத்தர குடும்பத்தினருக்கு எல்பிஜி வாங்குவதற்கு ₹5000 வழங்குங்கள் என்று சொன்னேன். அதை பிரதமர் குறிப்பெடுத்துக் கொண்டார்.

ஒரு லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு நோய் இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை. அதற்கு காரணம் பரிசோதனை செய்யாமல் இருப்பது தான். அதேபோன்று, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு பிபிஐ அங்கிகள் வழங்கப்படவில்லை.  நோயாளிகளை விட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்களின் பாதுகாப்பும் முக்கியம். இப்பணிகளுக்காக தமிழக அரசு கேட்ட நிதியை கொடுக்க வற்புறுத்தினேன். சுகாதாரத்துறை, காவல் துறை, நகர ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தில் பணியாற்றுகிறவர்கள் 24 மணி நேரம் பணியாற்றுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் 3 ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Baloo ,party meeting , Rs.10,000, given , below,poverty line,DR Baloo demands, party meeting
× RELATED ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திட்ட...