கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ரேஷன் கடை ஊழியர்களுக்கு சரமாரி அடி: வியாசர்பாடியில் பரபரப்பு

பெரம்பூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக  தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு தற்போது அந்த பணி நடைபெற்று வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் ஆரம்பம் முதலே சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஆயிரம் ரூபாய் பணத்தை பெறுவதற்காக குவிய தொடங்கினர். பின்னர் வீடுகளுக்குச் சென்று நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி வீடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சில ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் உள்ள ரேஷன் கடையில் நேற்று காலை 7 மணி முதலே 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடை முன்பு குவியத்தொடங்கினர்.

இதனைத்தொடர்ந்து 8 மணிக்கு டோக்கன் வழங்கப்படும் என ரேஷன் கடை ஊழியர்களால் ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில் 9 மணி வரை ரேஷன் கடை ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் கடைக்கு வந்து டோக்கன் தர ஆரம்பித்தனர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதில் சிலர் ஆத்திரமடைந்து ரேஷன் கடை ஊழியர்களை தாக்கினர். இதனால் கடை ஊழியர்கள் செய்வதறியாது கடையை மூடிவிட்டு அந்தப் பகுதியில் இருந்து செல்ல முயற்சி செய்தனர். அவர்களை முற்றுகையிட்டு மீண்டும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லாததால் ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள  அங்கிருந்து தப்பினர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.

Related Stories:

>