×

அமெரிக்காவின் சர்வாதிகாரத்தை அன்றே உடைத்து வளரும் நாடுகளுக்கு வழிகாட்டிய முரசொலி மாறன்

*  2001 தோகா வர்த்தக மாநாட்டில் நடத்திய அசாத்திய சாதனை
* உலக நாடுகள் பார்வையை இந்தியாவின் பக்கம் திருப்பியவர்

சென்னை: ‘கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை தங்களின் தேவைக்கு ஏற்ப இந்தியா தராவிட்டால் பதிலடி தருவோம்,’ என அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சின்னதொரு மிரட்டலுக்கே அடிபணிந்து தடாலடியாக ஏற்றுமதி தடையை மத்திய அரசு விலக்கியது, சர்வதேச அளவில் விவாதப் பொருளாகி இருப்பது இன்றைய காலம்... இதுவே, உலக அரங்கில் அமெரிக்காவை எதிர்த்து வளரும் நாடுகளாலும் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும் என தனி ஒரு மனிதனாக முரசொலி மாறன் நிரூபித்து காட்டி, உலக நாடுகளை உற்றுப்பார்க்க வைத்தது அந்தக் காலம்...அந்த வகையில், ஒரு மத்திய அமைச்சர் தனது துறை சார்ந்த விஷயங்களை எவ்வளவு ஆழமாக படித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உலகுக்கு எடுத்துக் காட்டாக இருந்தவர் மத்திய முன்னாள் வர்த்தக அமைச்சர் முரசொலி மாறன்.

தோகா வர்த்தக மாநாட்டில் இவர் நிகழ்த்திய அந்த சாதனை, இன்றைய காலக் கட்டத்தில் நினைவு கூர்வது அவசியமாகி உள்ளது. கடந்த 2001ம் ஆண்டு கத்தார் தலைநகர், தோகாவில், ‘உலக வர்த்தக மாநாடு’ நடைபெற்றது. இதில், 142 நாடுகள் பங்கேற்றன. அந்த மாநாட்டைத்தான், அப்போதைய மத்திய வர்த்தக அமைச்சராக இருந்த முரசொலி மாறன் ஸ்தம்பிக்க வைத்தார். அம்மாநாட்டில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக பொருட்கள் குவிப்பு தடுப்பு சட்டம், ஐரோப்பிய நாடுகளின் விவசாய மானியங்கள், ஏழை நாடுகளுக்கு குறைந்த விலையில் முக்கிய மருந்துகளை வழங்குதல் போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட இருந்தன.

இதற்காக வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக வரைவு ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பாதகமான பல அம்சங்கள் இருந்தன. அந்த மாநாட்டிற்கு முதலில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. திடீரென பயண திட்டத்தை மாற்றிய வாஜ்பாய், மத்திய வர்த்தக அமைச்சர் முரசொலி மாறன் தலைமையில் இந்திய குழுவை அனுப்புவதாக தெரிவித்தார். அன்றைய இரவு புறப்படும் முன்பாக பிரதமரை சந்தித்த முரசொலி மாறன், ‘நாளைய மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?’ என கேட்டார். அதற்கு வாஜ்பாய், ‘வர்த்தக அமைச்சரின் நிலைப்பாடு என்னவோ; அதுதான் இந்த நாட்டின் நிலைப்பாடும்.’ என முழு சுதந்திரம் கொடுத்தார்.

மேலும், மற்ற நாட்டு அதிபர்களுக்கு இணையான கவுரவத்துடன் செல்ல வேண்டும் என்பதற்காக, தனது தனி விமானத்தையும் தந்து வழியனுப்பி வைத்தார்.
பிரதமரின் நம்பிக்கையை காக்கவும், நாட்டின் நலனுக்காகவும் முழு மூச்சாக உழைத்தார் முரசொலி மாறன். விமானத்திலேயே அதிகாரிகளுடன் வரைவு ஒப்பந்தத்தை ஒவ்வொரு பக்கமாக எடுத்து விவாதிக்கத் தொடங்கினார். இதை எதிர்பாராத துறை அதிகாரிகள் சரியான முன்னேற்பாடு இன்றி திணற, முழு ஒப்பந்தத்தையும் இறுதி செய்யும் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டார் முரசொலி மாறன். அந்த நிமிடத்தில் இருந்து அடுத்த 2 நாட்கள் தூக்கமின்றி, துறை வல்லுநர்களிடம் விவாதித்து இந்தியாவுக்கு பாதகமான அம்சங்களை தனியே ஒரு பட்டியலிட்டார்.

மாநாட்டில் வாக்கெடுப்பு நடக்கும் சில மணி நேரம் முன்பாக பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல நாட்டு அமைச்சர்களை அழைத்து மாநாட்டுக்கு உள்ளேயே தனிக்கூட்டம் நடத்தி, அந்த ஒப்பந்தத்தின் பாதகங்களை விளக்கி, அவர்களின் ஆதரவை திரட்டினார். அதைத் தொடர்ந்து மாநாட்டில் முன்மொழியப்பட்ட வரைவு தீர்மானத்தில், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு உள்ள பாதகமான அம்சங்களை விவரித்து நீண்ட நெடிய உரையாற்றினார் முரசொலி மாறன். ‘நாம் ஒரு வலுவான பொது வர்த்தக அரங்கத்தை வேண்டுகிறோம்; அது, விதிமுறைகளைச்  சார்ந்து இயங்க வேண்டும், அதிகாரத்தைச் சார்ந்து அல்ல,’ என்று அதிகார  வட்டத்தினுள் நின்றபடியே, அந்த வட்டத்தின் விதிகளை   எதிர்த்து குரல் கொடுத்தார்.

அவரது உரையை கேட்டு அத்தனை தலைவர்களும் திகைத்தனர். அதோடு, ‘வளரும் நாடுகளுக்கு பாதகமான எந்த ஒப்பந்தத்தையும் உலக வர்த்தக அமைப்பு முன்னெடுக்கக் கூடாது,’ என ஒற்றை வரித் தீர்மானத்தை மாறன் முன்மொழிய, மற்ற மூன்றாம் நாடுகள் வழிமொழிய, அமெரிக்கா செய்வதறியாமல் திகைத்து நின்றது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபரே நேரடியாக பிரதமர் வாஜ்பாயிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். ‘உங்கள் அமைச்சரை சற்று சம்மதிக்க வையுங்கள்,’ என கேட்டுக் கொண்டார். ஆனால், பிரதமர் வாஜ்பாயோ, ‘எனது அரசுக்கு தனி மெஜாரிட்டி இல்லை. மாறன் முடிவுக்கு எதிராக நான் செயல்பட்டால் அரசே கவிழ்ந்து விடும்,’ என சொல்லி விட்டார்.

இதனால், அமெரிக்கா வேறு வழியின்றி பணிந்தது. இந்தியா கேட்ட திருத்தங்களை எல்லாம் செய்த பிறகே அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதுவரை உலகில் நடந்த சர்வதேச வர்த்தக மாநாடுகளில் முதல் முறையாக வரைவு ஒப்பந்தங்கள் முழுமையாக மாற்றப்பட்ட வரலாற்றை கொண்டது தோகா மாநாடுதான்,  தங்கள் ஒப்புதல் இல்லாவிட்டால், வல்லரசு நாடான அமெரிக்காவே நினைத்தாலும் எந்த ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என மூன்றாம் உலக நாடுகள் நம்பத் தொடங்கியது அன்றுதான். முரசொலி மாறனின் அசாத்திய திறமையை உலக ஏடுகள் புகழ்ந்து பாராட்டின. உலக அரங்கில் இந்தியா தன்மானத்துடன் விஸ்வரூபம் எடுத்து நின்றது.

அவர் உன்னிப்பாக கவனித்து செய்த ஒப்பந்தத்தின் விளைவுதான், இன்று இந்தியாவிடம் அமெரிக்க அதிபர் அத்தியாவசிய மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி கேட்டு நிற்பது. இல்லாவிட்டால், அது  ஒருவழிப் பாதையாக இருந்திருக்கும். ஏழை நாடுகளுக்கு கூட இன்று குறைந்த விலையில் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதற்கு முக்கிய காரணம் தோகா மாநாடுதான். அந்த வகையில், இந்தியாவை கடந்து பல ஏழை நாடுகளும் மாறனின் சேவைக்கு கடமைப்பட்டு இருக்கின்றன.

அமெரிக்கா மிரட்டிய  இந்த நேரத்தில்...
கொரோனா நோய் சிகிச்சைக்கு மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை இந்தியாவிடம் அமெரிக்கா கேட்டிருந்தது. இந்த மருந்தை தராவிட்டால் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று அதிபர் டிரம்ப் பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்தார். இதைத்தொடர்ந்து எந்த தாமதமும் இல்லாமல் இந்தியா, இந்த மருந்து ஏற்றுமதிக்கான தடையை நீக்கி உள்ளது. ஒரு சிறிய எச்சரிக்கைக்கே பயந்து மோடி அரசு அடிபணிந்தது நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பின்னணியில்தான் தோகாவில் நடந்த உலக வர்த்தக மாநாட்டில் அப்போதைய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் முரசொலி மாறனின் துணிச்சலான, அறிவுக்கூர்மையான, ஆளுமைமிக்க முடிவு நம்மை நினைவுகூர வைக்கிறது.

* அன்று இரவு புறப்படும் முன்பாக பிரதமரை சந்தித்த அன்றைய மத்திய வர்்த்தக அமைச்சர் முரசொலி மாறன், ‘நாளைய மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?’ என கேட்டார். அதற்கு வாஜ்பாய், ‘வர்த்தக அமைச்சரின் நிலைப்பாடு என்னவோ; அதுதான் இந்த நாட்டின் நிலைப்பாடும்.’ என முழு சுதந்திரம் கொடுத்தார்.

* மாநாட்டில் முன்மொழியப்பட்ட வரைவு தீர்மானத்தில், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு உள்ள பாதகமான அம்சங்களை விவரித்து நீண்ட நெடிய உரையாற்றினார்.

Tags : Murasoli Maran ,countries ,US , USA, dictatorship, Murasoli Maran, Corona Virus
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...