×

அதிகபட்சமாக காடையாம்பட்டியில் 68 மிமீ பதிவு: மாவட்டம் முழுவதும் ஆலங்கட்டி மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம்: சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், நேற்று மாலை கொட்டித்தீர்த்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் 100 பாரன்ஹீட்டை கடந்து வெயில் சுட்டெரித்தது. இதனிடையே, நேற்று முன்தினம் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தது. நேற்று இரண்டாவது நாளாக பல்வேறு இடங்களிலும் மழை தொடர்ந்தது.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, 3 மணியளவில் பரவலாக மழைபெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்தது.

மாநகரை பொறுத்தவரை, பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் கொண்டலாம்பட்டி ரவுண்டானா, சேலம் வணிகவரித்துறை அலுவலகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்த மரங்கள், சாலையில் முறிந்து விழுந்தன. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மழையின் போது வீசிய பலத்த காற்றால், சாலை தடுப்புகள், விளம்பர தட்டிகள் போன்றவை தூக்கி வீசப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சேலம் புது பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டிருந்த கிருமிநாசினி தெளிப்பு சுரங்கப்பாதையும் தூக்கி வீசப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கால், வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்களுக்கு இந்த மழை உற்சாகத்தை அளித்தது. வீட்டின் வாசலிலும், பால்கனிக்கும் சென்று மழையை ரசித்தனர். அதேசமயம், மழை காரணமாக ஒருசில இடங்களில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது.

இதேபோல் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் விவசாய வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது. கோடை தொடக்கத்திலேயே நல்ல மழை பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக காடையாம்பட்டியில்  68 மிமீ மழை பெய்தது. அதனை தொடர்ந்து ஆத்தூரில் 52 மிமீ,  ஏற்காட்டில் 52 மிமீ, சேலம் 12.4 மிமீ, ஆணைமடுவு 5 மிமீ, கரியகோயில் 7 மிமீ, ஓமலூர் 18.6 மிமீ,வாழப்பாடி 26 மிமீ, பெத்தநாய்க்கன்பாளையம் 8 மிமீ என மாவட்டம் முழுவதும் நேற்று 249 மிமீ மழை பெய்தது. கோடை வெயிலை சமாளிக்கவும், விவசாயம் கைகூடவும், இதேபோல் அடுத்து வரும் நாட்களிலும் மழை பெய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags : Maximum Cadiampatti ,district ,Salem ,growers , Salem, hail rain , 68mm log, growers, happy
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!