×

அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்தது போல ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொடுங்க: பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்

டெல்லி: உலகம் முழுவதும் பரவிய கொடிய கொரோனா வைரஸ் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசை கட்டுப்படுத்த மலேரியாவுக்கு தரப்படும் பழங்கால, அதிக செலவில்லாத ஹைடிராக்சி குளோரோகுயின் மாத்திரை நல்ல பலன் தருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். உலகின் பல நாடுகள் இம்மருந்தை பரித்துரைத்துள்ளன. இந்திய மருத்துவ சங்கமும் கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பரிந்துரை செய்துள்ளது. உலகிலேயே இம்மருந்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கியதும், மருந்து இருப்பை உறுதிபடுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின், பாராசிட்டமால் உள்ளிட்ட 14 வகையான மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி தடை விதித்தது.

இதனால், அமெரிக்கா, ஸ்பெயின், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன. ஏற்றுமதிக்கு தடை விதித்ததை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தின. இந்த மருந்தை பொறுத்த வரையில் அமெரிக்கா, இந்தியாவையே அதிகம் நம்பி உள்ளது. இதனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஞாயிறன்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது,  ஏற்கனவே ஆர்டர் செய்த அளவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை தர வேண்டுமென வலியுறுத்தினார்.  

இதைத்தொடர்ந்து ஏற்றுமதிக்கான தடையை தளர்த்துவது குறித்து இந்தியா பரிசீலித்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், ‘‘ஹைட்ட்ராக்சி குளோரோகுயின் மருந்து வேண்டுமென பிரதமர்  மோடியிடம் கேட்டுள்ளேன். இந்தியாவுடன் நல்ல நட்புறவு நிலவுவதால், அவர் தராமல் இருந்ததால்தான் ஆச்சரியப்படுவேன். அதே சமயம் அவர் மருந்தை தர மறுத்தாலும் பரவாயில்லை. அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடலாம்,’  என எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்குவதற்கான தடையை தளர்த்தி  உள்ளது.

இந்நிலையில், அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் என ராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால், பிரேசிலுக்கு இந்தியா மருந்து அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : President ,Manuman Sanjeevi ,Brazilian ,Modi Given Hydroxychloroquine , Give Hydroxychloroquine as Manuman Sanjeevi brought herb: Brazilian President's letter to PM Modi
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!