×

சாலையில் திரிந்தவர்களை மொத்தமாக தங்க வைத்துள்ளதால் கொரோனா தொற்று பரவும் அபாயம்: அதிகாரிகள் மெத்தனம்

தாம்பரம்: ஊரடங்கு உத்தரவு காரணமாக தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி சாலைகளில் சுற்றித்திரிந்த 80க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களை அதிகாரிகள் மீட்டு தாம்பரம் பேருந்து நிலையத்தில் தங்க வைத்திருந்தனர். இவர்களுக்கு நகராட்சி சார்பிலும், தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் உணவு வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் செங்கல்பட்டில் தங்கி கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 24 வயது மதிப்புடைய ஒருவர் செங்கல்பட்டு பகுதியில் சாப்பிட உணவுகள்  எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து நடந்தே தாம்பரம் வந்து, பேருந்து நிலையத்தில் ஏற்கனவே தங்கியிருந்த 80க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுடன் தங்கினார்.பின்னர், அவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து, தாம்பரம் பேருந்து நிலையத்தில் அவருடன் தங்கியிருந்த ஆதரவற்றவர்களை அதிகாரிகள் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தங்க வைத்துள்ளனர்.

இவ்வாறு, ஒரே இடத்தில் அனைவரும் நெருக்கமாக தங்க வைக்கப்பட்டிருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘பேருந்து நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள்  சமூக இடைவெளியின்றி தங்கியுள்ளதால் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அது வேகமாக மற்றவர்களையும் பாதிக்கும் நிலை உள்ளது. இவர்களை எந்த ஒரு மருத்துவ பரிசோதனையும் செய்யாமல் அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர். எனவே, இங்குள்ளவர்களை சமூக இடைவெளியில் தங்கவைத்து, உணவு மற்றும் மருத்துவ பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Roads ,Stronged , Coronavirus Risk, Whole Roads, Stronged
× RELATED பங்குனி உத்திரத்தை ஒட்டி...