* காளை முட்டி ஏட்டு படுகாயம்
* 30 பேர் மீது வழக்கு; 8 பேர் கைது
சிவகங்கை: கல்லல் அருகே 144 தடை உத்தரவை மீறி நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் போலீஸ் ஏட்டு பலத்த காயம் அடைந்தார். சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே கீழக்கோட்டை கிராமத்தில் 144 தடை உத்தரவை மீறி வடமாடு மஞ்சுவிரட்டு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. தகவல் அறிந்த மதகுபட்டி போலீஸ் எஸ்எஸ்ஐ கலையரசு, ஏட்டு கனகராஜ் ஆகியோர் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கு கூடியிருந்த 50க்கும் மேற்பட்டோர் சிதறி ஓடினர்.
அப்போது அங்கு கட்டப்பட்டிருந்த காளை கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடி வந்து எதிர்பாராதவிதமாக ஏட்டு கனகராஜை குத்தியது. இதில் அவருக்கு கண் பகுதியோடு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அப்பகுதியினர் மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் 8 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.