×

புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கொரோனா நபருடன் தொடர்பில் இருந்தவர்களின் சங்கிலி தொடர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னை: கொரோனா நோய் தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த அடுத்தடுத்த நபர்களை  சங்கிலி தொடர் போன்று கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணி புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தமிழக சுகாதாரத்துறை - போலீசார் இணைந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.   இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,421 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நேற்றைய நிலவரப்படி 690ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. சமூக தொற்றான 3ம் நிலைக்கு நகர்ந்து விட்டால் பெரும் இழப்புகளை தமிழகம் சந்திக்க வேண்டி வரும்.
 எனவே, அந்த நிலைக்கு சென்றுவிடாதபடி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.

தற்போது, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஓரளவு கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்கள் எங்கெல்லாம் சென்றார்கள்? அதன் மூலம் யாருக்கெல்லாம் பரவியுள்ளது என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்தினால் தான் சமூக பரவலை தடுக்க முடியும்.
 இது ஒரு சவாலான பணி. இதை தீவிரப்படுத்தி கண்டறிந்தால் மட்டுமே தமிழகம் தப்பிக்கும் என்ற நிலை உள்ளது. இதை கட்டுப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) சில வழிகாட்டுதல்களை கூறியுள்ளது. அதன்படி, தமிழகத்தில், சுகாதாரத்துறை, போலீசாருடன் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பட்டியலிட்டு, தனிமைப்படுத்தி வருகின்றனர்.

 மேலும், கொரோனா தொற்று உறுதியான நபர் கூறும் தகவல்களின் அடிப்படையில் அவர் எங்கெல்லாம் சென்று வந்தார், யாரையெல்லாம் சந்தித்தார் என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள் வரைபடமாக தயார் செய்து, அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிகின்றனர்.   இப்படிப்பட்ட விசாரணையை காவல் துறையில் உள்ள உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் அதையும் கடந்து சுகாதாரத்துறை - காவல் துறையினர் இணைந்து மேற்கொண்டு நவீன அறிவியல் சார்ந்த விசாரணையும் நோய் தொற்றுள்ள நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்கு உதவியாக இருந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

 அதாவது நோய்த்தொற்று உறுதியானவரின் செல்போன் எண்ணைக் கொண்டு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து கடைசி 10 நாட்களின் அழைப்பு விவரங்கள், இருப்பிட விவரங்களை போலீசார் சேகரிகின்றனர். அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் எங்கெல்லாம் சென்றார்? யாருடன் அவர் தொடர்பு வைத்திருந்தார் என்பதை கண்டறிகின்றனர்.  இப்படி சங்கிலித் தொடர் போல் அடுத்தடுத்த நபர்களை கண்டறிந்து அதற்கான பட்டியலை தயார் செய்து சம்பந்தப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தும் பணியை தமிழக சுகாதாரத்துறை- காவல் துறை இணைந்து தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் நொய் தொற்றுள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், சமூக பரவலை தடுக்கவும் வாய்ப்பாக அமையும் என்று நம்பப்படுகிறது.

நோய் தொற்றுள்ளவர் தப்ப முடியாது:
கொரோனா தொற்றுள்ளவரின் தொடர்புகளை சேகரிக்க இரண்டு விதமான புதிய தொழில்நுட்பத்தை போலீசார் செயல்படுத்தி வருகின்றனர். ஒன்று, தொற்றுள்ளவரின் புகைப்படத்தைக் கொண்டு, சுற்றுவட்டாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்துவது. மற்றொன்று அதிக எண்ணிக்கையில் தொற்று பதிவாகியுள்ள ஏரியாவில், தெர்மல் கேமராக்களை போலீசார் பொருத்தி வருகின்றனர். இந்த கேமராக்கள் ஒருவரது உடல் வெப்பநிலையை கண்காணிக்கும். பாதிக்கப்பட்ட அல்லது உடல் வெப்பநிலை அதிகமுள்ள நபர் அந்த கேமராவை கடந்து செல்லும் ேபாது அவர்களை அடையாளம் காட்டி பதிவு செய்து எச்சரிக்கை பதிவை அனுப்பும். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் தப்ப முடியாது.


Tags : Corona , New Technology, Corona, Chain Series
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...