×

கொரோனா வைரஸ் பாதிப்பால் உடல்நிலை மோசம்; இங்கிலாந்து பிரதமர் ஐ.சி.யூ-வில் அனுமதி: தற்காலிக பிரதமரானார் வெளியுறவு அமைச்சர்

லண்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பால் உடல்நிலை மோசமான இங்கிலாந்து பிரதமர் தற்போது ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்காலிக பிரதமராக வெளியுறவு அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (55), கடந்த சில வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தும் நிலைமை மோசமடைந்ததை அடுத்து அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு (ஐ.சி.யூ) மாற்றப்பட்டார். ‘டவுனிங் ஸ்ட்ரீட்’ இந்த தகவலை வெளியிட்டுள்ளது. லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையின் ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டதால், பிரதமரின் வேலைகளை பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் தற்காலிகமாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘பிரதமரின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, அவர் மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.’ என்றார். இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பிரதமர் போரிஸ் ஜான்சன், நீங்கள் விரைவில் மருத்துவமனையில் இருந்து பூரண நலத்துடன் வெளியே வருவீர்; முன்பு போலவே நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கும் முன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘மருத்துவரின் ஆலோசனையின் பேரில், கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளைக் காண்பிக்க மருத்துவமனைக்குச் செல்கிறேன்.

நான் நன்றாக இருக்கிறேன்; எனது குழுவினரிடம் தொடர்பில் இருக்கிறேன். இந்த வைரசை எதிர்த்துப் போராடவும், அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என்று தெரிவித்திருந்தார்.


Tags : ICU ,UK , Corona Virus, UK Prime Minister, Foreign Minister
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது