×

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயம்: நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து புதிய மாவட்டமாக அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறையை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை தனியாக பிரித்து தமிழகத்தில் 38-வது மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மயிலாடுதுறை கோட்டப் பகுதியில் வசிக்கும் சுமார் 12 லட்சம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி மாவட்டம் என்ற இனிப்பான செய்தியைத் சமீபத்தில் சட்டமன்றத்தில் தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் கேட்டு கடந்த 25 ஆண்டுகளாக போராட்டங்கள் நடந்துள்ள நிலையில் அதற்கு முடிவு காணும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 7 ஆம் தேதி விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அடிப்படையில் மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை முதல்வர் அறிவித்தார். நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்டத்தை பிரித்ததாக முதல்வர் தெரிவித்த்திருந்தார். இந்தநிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் மயிலாடுதுறைக்கு மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்படாததால் கொரோனா தடுப்பு பணிகளை வருவாய் நிர்வாக ஆணையர் ஒருங்கிணைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உதயமாகிறது. இதோடு சேர்த்து கடந்த ஒரு வருடத்தில் மட்டும் புதிதாக 6 மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரிந்த மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய 4 வட்டங்களைச் சேர்ந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Mayiladuthurai Udayam ,district ,38th District , Tamil Nadu, Mayiladuthurai, Nagai, Government, Tamil Nadu Government
× RELATED வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்