×

ஊரடங்கு உத்தரவு நெருக்கடியை பயன்படுத்தி மளிகை பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு

* காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை * அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவண்ணாமலை:  ஊரடங்கு உத்தரவு நெருக்கடியால், மளிகை பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. மேலும், காலாவதியான உணவு பொருட்கள் விற்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஆனாலும், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு விதிவிலக்கு அளித்திருக்கிறது.அதன்படி, மளிகை கடைகள், காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மட்டும் தினமும் காலை 6 மணி முதல் 1 மணி வரை திறந்திருக்கலாம் என அனுமதித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், பெரும்பாலான மளிகை கடைகள் தினமும் திறக்கப்படுகிறது. மேலும், ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நாளில் தொடங்கி, பொதுமக்கள் தங்கள் தேவைக்கான மளிகை பொருட்களை வாங்கி இருப்பு வைத்துள்ளனர். அதோடு, தினசரி கடைகளுக்கு வரும் கூட்டமும் குறையவில்லை. அதோடு, ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படலாம் என சமூக வலைதளங்களில் பரவும் தகவலால், மளிகை பொருட்களை வாங்குவது கடந்த சில நாட்களாக அதிகரித்திருக்கிறது.
எனவே, மளிகை பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. குறிப்பாக, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவற்றின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. அதோடு, ரவை, சேமியா போன்றவை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களில், காலாவதியானவை தற்போது புழக்கத்துக்கு வந்திருப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, ஒட்டுமொத்த விற்பனையாளர்கள் மூலம் கிராமப்பகுதியில் உள்ள மளிகை கடைகளுக்கு சப்ளை செய்யும் பொருட்களில், காலாவதியான பொருட்கள் உள்ளன.மளிகை கடைகளில் சமூக இடைவெளியில் நீண்ட நேரம் நின்று பொருட்களை வாங்கும் பொதுமக்கள், அத்தியாவசிய பொருட்கள் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர். எனவே, காலாவதி குறித்து கவனிக்கும் அவகாசம், பொறுமை இல்லை. இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி, காலாவதி பொருட்களை விற்பதாக தெரியவந்துள்ளது.
எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்களும் காலாவதி உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கவனித்து வாங்கும் விழிப்புணர்வு அவசியம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : curfew crisis , Rising ,prices ,groceries , crisis
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...