×

'பழிக்கு பழி என்பது நட்பாக இருக்க முடியாது', இந்தியர்களின் தேவையை தாண்டிதான் மருந்துகளை பிற நாடுகளுக்கு தர வேண்டும் : ராகுல் காந்தி

டெல்லி : இந்தியர்களின் தேவையை தாண்டிதான் உயிர் காக்கும் மருந்துகளை மற்ற நாடுகளுக்கு தரவேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பழிக்கு பழி என்பது நட்பாக இருக்க முடியாது; இருந்தாலும் இந்தியர்கள் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா கொடுக்கவில்லை என்றால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசி இருந்தார்.

அதிபர் டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியாவில் அனைத்து எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அமெரிக்காவின் இந்த மாதிரியான மிரட்டலுக்கு நாம் அடி பணியக் கூடாது என்று சொல்லியிருந்த  நிலையில்  இன்று காலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. மனிதாபிமானம்  அடிப்படையில் மருந்து கொடுப்பதாக இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பழிக்கு பழி என்பது நட்பாக இருக்க முடியாது. இந்தியா அனைத்து நாடுகளுக்கும் அவர்களின் தேவைப்படும் நேரத்தில் உதவ வேண்டும், ஆனால் உயிர் காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு போதுமான அளவில் கிடைக்க வேண்டும். இந்தியர்களின் தேவையை தாண்டிதான் உயிர்காக்கும் மருந்துகளை மற்ற நாடுகளுக்கு தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Revenge ,Rahul Gandhi , Indians, Drugs, Rahul Gandhi, Hydroxychloroquine
× RELATED சொல்லிட்டாங்க…