×

செய்யூர் அடுத்த சூனாம்பேடு அருகே மாசடைந்த குடிநீர் குடித்த பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு

செய்யூர்: சூனாம்பேடு அருகே சுகாதாரமற்ற குடிநீரை குடித்த பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன் சூனாம்பேடு ஊராட்சி புதுப்பட்டு கிராமத்திற்கு தாமோதரன் என்பவர் வந்தார். கடந்த 3ம் தேதி அவருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள், அவரை மதுராந்தகம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த அன்பு (40) என்பவருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டது. அவரையும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையில், அதே பகுதியை சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை, வினோத்குமார் (27), பாலு (38), வெண்ணிலா (55), சின்ன பொண்ணு (35), முருகேசன் (56) ஆகியோருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது.

தகவலறிந்து ஆரம்ப சுகாதாரத்துறையினர் மற்றும் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அப்பகுதி மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் சுகாதாரமற்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து, குடிநீர் எடுக்கப்படும் கிணறு மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டன. தொடர்ந்து கிராமம் முழுவதும் கிருமிநாசினிகள், பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவை தெளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே, ஒருவர் இறந்து நிலையில், பலர் பாதிக்கப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Cheyyur ,Sunamped , Diarrhea,people drinking ,drinking water,Sunamped next, Cheyyur
× RELATED செய்யூர் அருகே குடிநீர் குழாய்க்காக...