×

விளையாட்டு மைதானத்திற்கு மாற்றியும் சமூக இடைவெளி கடைபிடிக்காத தி.நகர் காய்கறி மார்க்கெட் மூடல்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: விளையாட்டு மைதானத்திற்கு மாற்றியும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தால் தி.நகர் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், காய்கறி, பால், மளிகைக்கடை உள்ளிட்டவை செயல்படுகின்றன. இங்கு வரும் பொதுமக்கள் பொருட்கள் வாங்கும்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகரில் உள்ள பெரும்பாலான காய்கறி மார்க்கெட்டுகள் குறுகிய இடங்களில் செயல்பட்டதால், கூட்ட நெரிசலை தவிர்க்க அந்த மார்க்கெட்டுகள் அருகில் உள்ள பள்ளி, கல்லூரி மைதானம், விளையாட்டு திடல், பஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டன.

அங்கு, போதிய இடைவெளியில் கடைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் சமூக இடைவெளியில் காய்கறி வாங்கி வருகின்றனர். அதன்படி தி.நகர் வெங்கட் நாராயணா சாலை உள்ள விளையாட்டு மைதானம் காய்கறி மார்க்கெட்டாக மாற்றப்பட்டது. இந்த மார்க்கெட்டில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல், கூட்டம் கூட்டமாக நின்று பொருட்களை வாங்குவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. பலமுறை வலியுறுத்தியும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததால், சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து இந்த மார்க்கெட்டை உத்தரவிட்டது. அதன்படி, இந்த மைதானத்தில்  கடை வைத்திருந்த அனைத்து வியாபாரிகளையும் நேற்று அகற்றிவிட்டு அந்த மைதானத்தை பூட்டி சீல் வைத்தனர்.

Tags : closure ,playground ,Corporation , Urban Vegetable, Market, Closure, Convention Action
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு