×

அரசு உத்தரவை பின்பற்றாத டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை :அதிகாரி எச்சரிக்கை

சென்னை: டாஸ்மாக் கடைகளில் விதிகளை மீறி மதுபானங்களை விற்பனை செய்வது தெரிந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.    இதுகுறித்து அவர் கூறியதாவது: ஊரடங்கின்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்தும், கடைகளின் சுவர்களில் துளையிட்டும் மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையில் குறிப்பிட்ட கடை பணியாளர்கள் புகார் அளித்துள்ளனர்.  இதேபோல், சில பகுதிகளில் கடைகளில் உள்ள பணியாளர்களிலே விதிகளை மீறி கடைகளை திறந்து மதுவிற்பனையில் ஈடுபட்டது குறித்தும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளால் கடைகளில் உள்ள மதுபானங்களின் இருப்பு குறைந்துள்ளதாக தெரிகிறது. எனவே, வரும் 15ம் தேதி ஊரடங்கு முடிந்த பின்னர் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு முன்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊழியர்கள் தங்களது மாவட்ட மேலாளர்களிடம் 24.3.2020ம் தேதி வரையிலான கடை இருப்பு குறித்த விவரத்தையும், தற்போது உள்ள இருப்பு விவரத்தையும் விவரமாக தெரிவிக்க வேண்டும்.  அவ்வாறு தெரிவித்த பின்னரே கடைகளை திறக்க அனுமதிக்கப்படும். இதில், தவறுகள் ஏற்படும் பட்சத்தில் குறிப்பிட்ட பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், எந்தெந்த கடைகள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்ற விவரத்தையும் தலைமை அலுவலகம் தெரிவிக்கும்.

இதுகுறித்த விவரங்களை அந்தந்த மாவட்ட மேலாளர்கள் தங்களின் மாவட்டத்தில் உள்ள கடை மேற்பார்வையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவித்துள்ளனர்.
மேலும், அனைத்து மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரசு உத்தரவை தவறாமல் பின்பற்றி எந்த ஒரு முறைகேடுகளுக்கும் ஆளாகாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு முறைகேடுகளில் ஈடுபடும் பணியாளர்கள் மீது காவல்துறை மூலமாகவும், நிர்வாகம் ரீதியாகவும் மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு கூறினார்.

Tags : Task Force ,Caution officer Action ,Caution officer , Government order, task force, officer
× RELATED உபரியாக பணிபுரிந்து வந்த...