×

இங்கிலாந்து இளவரசர், பிரதமருக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கொரோனா நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தனிமைப்படுத்திக் கொண்டால் மட்டுமே முடியும்: முதல்வர் எடப்பாடி அறிவுரை

சென்னை:  மக்களே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டால் மட்டுமே கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க முடியும் என்று முதல்வர் எடப்பாடி அறிவுரை வழங்கியுள்ளார்.  சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக நேற்று ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், போலீஸ் டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 கூட்டம் முடிந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் புதிதாக 21 இடங்களில் கொரோனா பரிசோதனை நிலையம் உருவாக்கப்படும். இதையும் சேர்த்து 38 ஆய்வகங்கள் இடம்பெறும். தமிழகத்தில் இதுவரை 4,612 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 571 பேருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 1,842 பேர் சந்தேகத்தில் பேரின் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 22,049 படுக்கைகள் தயாராக உள்ளது. 3,300 வென்டிலேட்டர்கள் உள்ளது. முககவசம் போதிய அளவு உள்ளது. கூடுதலாக 2,200 வென்டிலேட்டர் வாங்க  ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. புதிதாக ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 30 நிமிடங்களில் ஒருவருக்கு துல்லியமாக பரிசோதனை செய்ய முடியும். 9ம் தேதி ரேபிட் டெஸ்ட் கிட் சீனாவில் இருந்து வந்துவிடும். 10ம் தேதி முதல் எல்லா மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனைகள் விரைவாக தொடங்கப்படும்.

 கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக மத்திய அரசு 500 கோடி உதவித்தொகை அளித்துள்ளது. பொதுமக்களே தங்களை தனிமை படுத்திக்கொண்டால் மட்டுமே கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்கும். எந்த அறிகுறியும் இல்லாமல் நோய் பரவும் ஆபத்து உள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடித்தால் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.  காய்கறி கடை, மளிகை கடைகாரர்கள் 2 கி.மீ. தூரம் உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே சென்று வழங்க ஆலோசனை வழங்கியுள்ளோம். நடமாடும் காய்கறி கடைகளை அரசே ஏற்பாடு செய்துள்ளது. படிப்படியாக மக்களின் நடமாட்டத்தை குறைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

 தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள 21 நாட்கள் முடிந்த பிறகுதான், நோயின் தன்மை அறிந்து, அதற்கு ஏற்றவாறு பள்ளி தேர்வுகள் தேதி குறித்து அறிவிக்கப்படும். சென்னையில் 37 இடங்களை சீல் வைத்து கண்காணித்து வருகிறோம். இங்கிலாந்தில் அரச குடும்பத்தில் உள்ள இளவரசர் சார்லஸ் மற்றும் பிரதமருக்கும் நோய் வந்துள்ளது. சாதாரண மக்களின் நிலை என்ன என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். மக்கள் வீட்டிலேயே இருங்கள், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வீடு தேடி வரும். பொதுமக்கள் எக்காரணத்தை கொண்டும் வெளியில் வர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

விடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதி
முதல்வர் பழனிசாமி மேலும் கூறுகையில், அமைப்புசாரா தொழிலாளர்கள் 83 ஆயிரம்  பேர் உள்ளனர். இவர்களுக்கு வங்கிகள் மூலம் தலா 1000 நிவாரண தொகை  வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அரசு சார்பில்  விரைவில் வழங்கப்படும். மற்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள்   எங்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

அதன்படி, விடுபட்டுள்ள தமிழ்நாடு முடி திருத்தும் நல வாரியம், சலவை தொழிலாளர்கள் வாரியம், பனைமர தொழிலாளர்கள் வாரியம், கைவினை தொழிலாளர்கள் வாரியம், கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர் வாரியம், தோல்  உற்பத்தி, பதனிடும்  தொழிலாளர் நல வாரியம், ஓவியர் நல வாரியம், உப்பள நல  வாரியம், மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரியம், வீட்டு பணியாளர்கள் வாரியம்,  விசைத்தறி  நெசவாளர்கள் நலவாரியம், சமையல் தொழிலாளர்கள் வாரியம், கிராம கலைஞர்கள்  வாரியம் உள்ளிட்டவர்களுக்கும் தலா 1000 மற்றும் அத்தியாவசிய  பொருட்கள் உள்ளிட்ட உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.



Tags : prince ,England ,Chief Minister ,Corona , Prince of England, Prime Minister, Coronal Disease, Chief Edapadi
× RELATED ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு