கொள்ளையடிக்க குடி அடிமைகள் திட்டமிடுவதால் டாஸ்மாக் கடை சரக்குகள் கல்யாண மண்டபத்துக்கு மாறுது: தமிழகம் முழுவதும் பணிகள் தீவிரம்

சென்னை: குடிமகன்களிடமிருந்து மதுபாட்டில்களை பாதுகாக்க டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை அருகில் உள்ள திருமண மண்டபங்களுக்கு மாற்றும் பணி தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.    தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவால், டாஸ்மாக் கடைகள் மார்ச் 24ம் தேதி மாலை 6 மணிக்கு மூடப்பட்டது. ஊடரங்கு ஏப்ரல் 1ம் தேதி வரை தான் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்ததை நம்பி பெரும்பாலான குடிமகன்கள் அன்றைய தேதி வரைக்கும் மட்டுமே சரக்குகளை வாங்கி வைத்திருந்தனர். ஆனால் திடீரென அன்று இரவு பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்தார்.

இதனால் குடிமகன்கள் வாங்கி வைத்திருந்த ஸ்டாக் அனைத்தும் ஏப்ரல் 1ம் தேதியுடன் தீர்ந்து போனது. அதன் பின்பு கள்ள மார்க்கெட்டில் மதுபாட்டில்கள் கிடைக்கவில்லை.

இதனால் குடிக்க முடியாமல் மது அடிமைகள் தவித்து வருகின்றனர். தற்போது வன்முறையிலும் இறங்க தொடங்கியுள்ளனர். குடும்பத்தில் சண்டை போடுவதும், பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்வதும்  அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் பலர் போதைக்காக அபாயகரமானவற்றை அருந்தி போதை ஏற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த விபரீதத்திலும் சிலர் இறந்து வருகின்றனர். இதற்கிடையில், வெறிகொண்ட குடிமகன்களின் பார்வை இப்போது பூட்டிய டாஸ்மாக் கடைகளின் பக்கம் திரும்பியிருக்கிறது.

ஒவ்வொரு கடையிலும் 15 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள மதுபாட்டில்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள கடைகளில் மதிப்பு பல கோடிகளை தாண்டும்.

மது அருந்தியே தீர வேண்டும் என்று வெறியில் உள்ள குடிமகன்கள் கும்பலாக கடைகளை அடித்து உடைத்து திருட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது.

இதையடுத்து அவற்றை பாதுகாப்பாக போலீஸ் பாதுகாப்புடன் அருகில் உள்ள திருமண மண்டபங்களுக்கு மாற்ற முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து அவற்றை பாதுகாப்பாக அருகில் உள்ள மண்டபங்களுக்கு மாற்றும் பணி தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி சுமார் 1,000 கடைகளில் இருந்த மதுபானங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டன. மீதி கடைகளில் உள்ள மதுபானங்களை படிப்படியாக இடம் மாற்றும் செய்யும் பணி நடந்து வருகிறது. சரக்கு உள்ள டாஸ்மாக் கடைகளின் வெளியே உள்ள ஷட்டர்களின் மீது இரும்புக் கம்பியால் ஆன பாதுகாப்புக் கவசத்தை டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>