×

அமெரிக்கா அடுத்த வாரம் செப்.11, பியர்ல் ஹார்பர் போன்ற சோகங்களை சந்திக்க போகிறது: ராணுவ டாக்டர் கருத்து

வாஷிங்டன்: உலக வர்த்தக மையம் மீது செப்.11ல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், பியர்ல் ஹார்பர் தாக்குதல் போன்ற சோகங்களை அமெரிக்கா அடுத்த வாரம் சந்திக்கப்போகிறது என ராணுவ டாக்டர் வைஸ் அட்மிரல் ஜெரோம் ஆதம்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 3.3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பு 10 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. அடுத்த 2 வாரங்களில் அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ஏற்கனவே கூறியுள்ளார். அதேநேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில், பாதிப்பு எண்ணிக்கை உயர்வது நிற்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய டாக்டர் வைஸ் அட்மிரல் ஜெரோம் ஆதம்ஸ், கொரோனா தாக்குதல் குறித்து கூறியதாவது: அமெரிக்க வரலாற்றில் நடந்த சில சோகமான சம்பவங்களுக்கு இணையாக கொரோனா பாதிப்பு இருக்கும். 2ம் உலகம் போரில் அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் துறைமுகத்தின் மீது ஜப்பான் நடத்திய தாக்குதல், அமெரிக்காவில் நடந்த செப்.11 தீவிரவாத தாக்குதல் ஆகிய இரு சம்பவங்களில் ஏற்பட்டது போன்ற சோகங்கள் அமெரிக்காவில் அடுத்த வாரம் ஏற்படலாம். அமெரிக்கர்களின் வாழ்வில் மிக மோசமான நேரமாக இருக்க போகிறது.

இந்த அபாயத்தை குறைக்க வேண்டும் என்றால் நாம் ஒவ்வொருவரும் தனித்து இருக்க வேண்டும் என்ற நமது கடமையை செய்ய வேண்டும். 90 சதவீத அமெரிக்கர்கள் தங்கள் கடமையை செய்கின்றனர். இன்னும் 30 நாட்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற மாநில ஆளுநர்கள் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவில் செப்.11 தாக்குதலில் 2,977 பேர் இறந்தனர். 2ம் உலகப் போரில் பியர்ல் ஹார்பர் தாக்குதலில் 2,400 பேர்தான் பலியாயினர். ஆனால் இவற்றை விட 3 மடங்கு அதிகமாக கொரோனா பலி உள்ளது. நியூயார்க்கில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் உச்சக்கட்ட நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி அமெரிக்க நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா ஒழிப்பு பணியில் ஆயிரம் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் உட்பட 50 ஆயிரம் வீரர்களை அமெரிக்க ராணுவம் களம் இறக்கியுள்ளது. அமெரிக்க கடற்படையின் மருத்துவமனை கப்பல்கள் இரண்டு அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு அனுபப்பட்டுள்ளதன. வெள்ளை மாளிகையில் நேற்று அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது: இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 50 மாநிலங்களில் பேரிடர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நியூயார்க்கில் பாதிப்பு மற்றும் மரணம் சற்று குறைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது நல்ல அறிகுறி.

ஆனால் கொரோனா பாதிப்பு உச்சநிலையை அடைந்துள்ளதால் இன்னும் பலர் இறக்கலாம். இதை அமெரிக்கா எதிர்கொண்டு, கொரோனா பாதிப்பை உயர்வதை அமெரிக்கா தடுக்கும்.  2 கோடியே 90 லட்சம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்கா கொள்முதல் செய்துள்ளது. இது நாடு முழுவதும் விநியோகிக்கப்படும். இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும்படி இந்திய பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ளேன். அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் எல்லாம் உலகின் பல இடங்களில் இருந்து அமெரிக்கா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. சரக்கு விமானங்கள் 30 கோடி கையுறைகள், 80 லட்சம் முகக்கவசங்கள், 30 லட்சம் பாதுகாப்பு உடைகள் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளன என்றார்.

Tags : Pearl Harbor ,America ,Army Doctor , USA, Harper, Army Doctor, Corona
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல்...