×
Saravana Stores

ஒரு கண்ணில் வெண்ணெய்... இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு... மாநிலங்களுக்கான பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம்

* தென் மாநிலங்களுக்கு குறைவாக ஒதுக்கீடு

புதுடெல்லி: மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்துக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா வைரசால் அதிகமாக தென்மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், தென் மாநிலங்கள் அதிருப்தி அடைந்துள்ளன.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன. இந்நிலையில், ெகாரோனா பாதிப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்றும், 15வது நிதிக்கமிஷன் நிதியை ஒதுக்க வேண்டும் என்று மாநிலங்கள் கோரி வந்தன.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் கடந்த 3ம் தேதி மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்துக்கு 11,092 கோடி ஒதுக்குவதாகவும், 15வது நிதிக்கமிஷன் பரிந்துரைப்படி தமிழகம், ஆந்திரா உட்பட 14 மாநிலங்களுக்கு 6,195 கோடி ஒதுக்குவதாகவும் அறிவித்தார்.மாநில பேரிடர் மேலாண்மை நிதி அறிவிக்கப்பட்டதில்தான் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காரணம், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தென்மாநிலங்களுக்கு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுதான்.

நிதியமைச்சரின் அறிவிப்பு படி, மகாராஷ்டிராவுக்கு 1,611 கோடியும், உத்தரப் பிரதேசத்துக்கு 966 கோடியும், மத்தியப் பிரதேசத்துக்கு 910 கோடியும், பீகாருக்கு 708 கோடியும், ஒடிசாவுக்கு 802 கோடியும், ராஜஸ்தானுக்கு 740.50 கோடியும், மேற்குவங்கத்துக்கு 505.50 கோடியும், தமிழகத்துக்கு 510 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு 157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டெல்லிக்கு நிதி ஒதுக்கீடே செய்யப்படவில்லை.

இதில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா 748 பேரும், தமிழகத்தில் 571 பேரும், கேரளாவில் 314 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 305 பேரும், பீகாரில் 32 ேபரும், டெல்லியில் 523 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், நிதி ஒதுக்கீட்டை பொருத்த வரையில் பாஜ ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிகமாக இருப்பதும், ஆனால், மகாராஷ்டிராவை தவிர மற்ற மாநிலங்களில் பாதிப்பு என்பது குறைவாகத்தான் இருக்கின்றன என்பதும் தெரியும் எ்னறு தென் மாநில தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பேரிடர் மேலாண்மை நிதிக்கு மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளது.

மாநிலங்கள்    பாதிப்பு    நிதி ஒதுக்கீடு
மகாராஷ்டிரா    748    1,611 கோடி
உத்தரபிரதேசம்    305    966 கோடி
மத்திய பிரதேசம்    165    910 கோடி
தமிழகம்                       571    510 கோடி
கேரளா                      314    157 கோடி
பீகார்                     32    708 கோடி
டெல்லி                     523    இல்ைல



Tags : states ,government , States, Disaster Management Fund, Corona, Federal Governmen
× RELATED 16 மாநிலங்களில் தடை விதித்தும் நாடு...