×

அமெரிக்க பெண் புலிக்கு கொரோனா: உயிரியல் பூங்கா விலங்குகளை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் பெண் புலிக்கு கொரோனா பரவிய சம்பவத்தையடுத்து, நாடு முழுவதும் உள்ள உயிரியில் பூங்காங்களில் விலங்குகளை தீவிரமாக கண்காணிக்கமத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரோன்ஸ் உயிரியல் பூங்காவில் ‘நாடியா’ என்ற 4 வயது பெண் புலி உள்ளது. இதற்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. புலியின் பராமரிப்பாளரிடமிருந்து, இந்த தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவிய சம்பவத்தையடுத்து, இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள உயிரியில் பூங்காங்களில், பாலூட்டி விலங்குகளை தீவிரமாக கண்காணிக்க மத்திய உயிரியல் பூங்கா ஆணையம்(சிஇசட்ஏ) உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சிஇசட்ஏ செயலாளர் எஸ்.பி.யாதவ் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை சிசிடிவி கேமிரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். ஏதாவது வித்தியாசமான அறிகுறிகள் தெரிந்தால், சந்தேக விலங்குகளில் ரத்த மாதிரிகளை, பரிசோதனைக்காக சம்பந்தப்பட்ட விலங்குகள் நல மையங்களுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த மாதிரிகளை போபாலில் உள்ள விலங்கு நோய் பாதுகாப்பு மையம், அரியானாவின் ஹிசார் பகுதியில் உள்ள தேசிய ஆராய்ச்சி மையம், உ.பி பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுக்கும் அனுப்பலாம். நோய்வாய்ப்பட்ட விலங்குகள் தனிமைப்படுத்த வேண்டும். பராமரிப்பாளர் பாதுகாப்பு கவசம் இல்லாமல் விலங்குகள் அருகில் செல்லக் கூடாது. உணவு அளிக்கும்போது கூட விலங்குகளிடம் நெருங்க கூடாது. அனைத்துவிதமான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விடுத்துள்ள அறிவுறுத்தலில், ‘‘தேசிய பூங்காங்களில் விலங்குகளுக்கு, கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், அனைத்து உயிரியல் பூங்காங்கள், சரணாலயங்கள், புலிகள் காப்பகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மனித நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். விலங்குகளிடம் மனிதர்கள் நெருங்கவதை குறைக்க வேண்டும். மருத்துவ குழுக்களை அமைத்து விலங்குகளை கண்காணிக்க வேண்டும்’’ என கூறியுள்ளது.

Tags : American ,woman tiger corona ,government , American female tiger, corona, zoo, animals, central government
× RELATED தனிமை வாழ்க்கைஉயிருக்கே ஆபத்து: உளவியல் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை