×

‘சமீபத்திய காலங்களில் இந்தியாவின் மிகப்பெரிய சவால்’ என்ற தலைப்பில் கட்டுரை: உயிர்வாழ முடியாவிட்டால் ஊரடங்கை மீறுவார்கள்: முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பரபரப்பு

புதுடெல்லி: முன்னாள் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநரும், பொருளாதார வல்லுனருமான ரகுராம் ராஜன், ‘சமீபத்திய காலங்களில் இந்தியாவின் மிகப்பெரிய சவால்’ என்ற தலைப்பில் வலைப்பதிவில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிவரும். பொருளாதார ரீதியாகப் பார்த்தால், சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியா மிகப்பெரிய அவசரநிலையை எதிர்கொண்டுள்ளது. 2008-09ல் உலகளாவிய நிதிநிலை நெருக்கடி இருந்தபோதும், மத்திய அரசாங்க நிதி ஆரோக்கியமாக இருந்தது. ஆனால், தற்போதைய நிலை நெருக்கடியில் உள்ளது.

வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திட்டமிட வேண்டும். தொற்றுப் பகுதிகளில் போதுமான முன்னெச்சரிக்கைகளுடன் சில செயல்பாடுகளை எவ்வாறு மறுதொடக்கம் செய்யலாம் என்பதையும் சிந்திக்க வேண்டும். பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்வதற்காக, ஆரோக்கியமான இளைஞர்களை வேலை செய்யும் இடத்திற்கு அருகிலுள்ள விடுதிகளில் பணியமர்த்தலாம். உற்பத்தியாளர்கள் தங்கள் முழு உற்பத்தித் திறனையும் சந்தைப்படுத்த வேண்டியுள்ளதால், அவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். இந்தத் திட்டங்களை அங்கீகரிப்பதற்கும், அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு செயல்பாட்டை எளிதாக்குவதற்கும் நிர்வாக அமைப்பு உதவ வேண்டும்.

ஊரடங்கால் மக்கள் உயிர்வாழ முடியாவிட்டால், மீண்டும் வேலைக்குச் செல்வார்கள்.  ஊரடங்கை மீறுவார்கள்.  வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்கள் நிச்சயமாக கவலையளிக்க கூடிய வகையில் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக செலவிடக்கூடிய அமெரிக்கா அல்லது ஐரோப்பாவைப் போலல்லாமல், இந்த நெருக்கடியில் பெரிய நிதி பற்றாக்குறையுடன் செலவிட வேண்டியிருக்கும். எனவே, உடனடித் தேவைகளுக்கு கவனம் செலுத்தும்போது, குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த செலவினங்களை குறைக்க வேண்டும் அல்லது தாமதப்படுத்த வேண்டும்.

பிரதமர் அலுவலகம் மூலமாக மட்டுமே எல்லாவற்றையும் இயக்குவது, செயல்படுவது சரியல்ல. இது பிரச்னையில் இருந்து மீள பெரிய அளவில் உதவாது. எனவே, நிபுணர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும். எதிர்க்கட்சியில் உள்ள உறுப்பினர்கள் பலர் ஏற்கெனவே சந்தித்த சர்வதேச அளவிலான பொருளாதார நெருக்கடி உட்பட பல சவால்களை சிறப்பாக கையாண்டு, நிபுணத்துவம் பெற்றுள்ளனர். எனவே, கட்சி பேதங்களை கடந்து அவர்களுடனும் ஆலோசிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



Tags : India ,Governor ,RBI , Former Governor of the Reserve Bank of India, Curfew
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு