×

ஆரணியில் ஊரடங்கு உத்தரவால் கடும் பாதிப்பு; ஆலைகளில் தேங்கி கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்: அரிசி விலை உயரும் அபாயம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, களம்பூர், சேவூர், ராட்டிணமங்கலம், இரும்பேடு, எஸ்.வி.நகரம் ஆகிய பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. இங்கு  ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கும் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல் வகைகள் இங்கு அரிசியாக உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஆரணி பகுதிகளில் செயல்படும் அரிசி ஆலைகளுக்கு, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும், நெல் கொண்டு வரப்பட்டு அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் மூலப்பொருட்கள், எரிபொருட்களான விறகு, முந்திரிதோல், கடலைப்பொட்டு போன்றவை பண்ருட்டி, கடலூர், கேரளா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசி ஆலையில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் முந்திரி தோல் ஒரு டன் ₹5 ஆயிரத்திலிருந்து தற்போது ₹8 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

வெளி மாநிலங்களுக்கு செல்ல தடை உள்ளதால், மூலப்பொருட்களை கொண்டுவர லாரி உரிமையாளர்கள் அதிக வாடகை வசூலிக்கின்றனர். அதேபோல் அரிசி உற்பத்தியின்போது கிடைக்கும் தவிடு வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாததால் ஆலைகளில் தேங்கி கிடக்கிறது. மேலும், ஆரணி பகுதிகளில் உள்ள மாடர்ன் ரைஸ்மில்களில் போதிய எரிபொருள், மூலப்பொருட்கள் கிடைக்காமல், கொள்முதல் செய்யப்பட்ட லட்சக்கணக்கான நெல் மூட்டைகள், அரிசி உற்பத்தி செய்ய முடியாமல் ஆலைகளில் தேங்கி கிடக்கிறது. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகளும் உற்பத்தி செய்த நெல்லை விற்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதே நிலை நீடித்தால் அரிசி விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே அரிசி ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், அரிசி, நெல், எரிபொருட்கள் ஆகியவற்றை தடையின்றி எடுத்து செல்லவும், கொண்டுவரவும் லாரிகளை அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



Tags : Millions ,fort ,Mills , Oranges, Paddy Bundles
× RELATED வரலாற்றுப் புகழ்பெற்ற ரஞ்சன்குடி...