×

ஜெயங்கொண்டம் பகுதியில் வாழ்வாதாரமின்றி தவிக்கும் நெசவாளர்கள்

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள கிராமங்களான ஜெயங்கொண்டம், சின்ன வளையம், கல்லாத்தூர், ஆண்டிமடம், செங்குந்தபுரம், வாரியங்காவல், இலையூர், மருதூர், குவாகம், பொன்பரப்பி, செந்துறை, நல்லாம்பாளையம், உஞ்சினி உள்ளிட்ட பல கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நெசவுத் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொருவரும் குடும்பத்துடன் தறி நெய்வது, நூல் கோர்ப்பது, தார் சுற்றுவது, ஆலை ஓடுவது, பாவு தோய்தல் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர். இந்த கிராமங்களில் 500 க்கும் மேற்பட்டோர் நெசவு தொழிலை பிரதானமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவால் நெசவாளர்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். நெசவு தொழில் செய்பவர்கள் உட்கோட்டை ,கும்பகோணம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பட்டுப்புடவை நெய்வதற்கான நூல்களை வாங்கி வந்து அவற்றை நெய்து கொடுத்து அதற்கான கூலியை பெறுவது வழக்கம். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், நெய்த சேலைகளை கொண்டு செல்ல முடியவில்லை. மாற்று சேலை நெய்வதற்கான நூலை வாங்கி வர முடியவில்லை.

இப்படி எந்தவித செயல்பாடும் நடைபெறாமல் இருப்பதால் தாங்கள் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட கையில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நெசவு தொழிலாளர்களுக்கு 3 மாதத்திற்கு ரூ. 25 ஆயிரம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Jayankondam Jayankondam , Jayankondam, weavers
× RELATED ஜெயங்கொண்டத்தில் நரிக்குறவர்...