×

கொரோனா பிடியில் சிக்கித் தவிக்கும் நியூயார்க்; அயராது போராடும் மருத்துவர்கள்: போதிய படுக்கைகள் இல்லாததால் திணறும் அமெரிக்கா

நியூயார்க்: உலகின் நிதி மையமாக கருதப்படும் நியூயார்க் நகரம் இப்போது கொரோனா வைரஸின் மையமாகவும் மாறியுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்படும் நிலையில் அங்குள்ள மருத்துவமனைகள் எவ்வாறு செயல்படுகன்றன என்பதை காணலாம். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நியூயார்க் நகரில் உள்ள அமெரிக்காவில் உலக புகழ் பெற்ற புரூக்ளின் பல்கலைக்கழக மருத்துவமனையில் இப்போது போர்க்களம் போன்ற காட்சிகளை காண முடிகிறது. அறைகளில் மட்டுமின்றி போய்வரும் பாதைகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் படுக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இதிலும் ஒரு துயரமான சம்பவம் என்னவென்றால் கிட்டத்தட்ட அனைவருக்குமே வெண்டிலேட்டர்கள் தேவைப்படுவதாக மருத்துவமனைக்குள் சென்று செய்தி சேகரித்து வந்த CNN செய்தியாளர் கூறுகிறார். வெண்டிலேட்டர் கிடைத்தால் உயிர் பிழைக்கலாம் இல்லை என்றால் மரணம் நிச்சயம் என்ற நிலை.

உயிரிழந்துவிட்டால் சில நிமிடங்களுக்குள் உடலை துணியில் சுற்றி வெளியே அனுப்பி விடுகிறார்கள். இதன் பிறகு இறந்தவரின் படுக்கைக்கு வேறொரு நோயாளி வந்துவிடுகிறார். நியூயார்க்கில் உள்ள அனைத்து மருத்துவமனைகளின் நிலையும் இது தான். நியூயார்க் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1லட்சத்து 20 ஆயிரத்தை கடந்து விட்டது. 4,000 அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர். சுமார் 5 ஆயிரம் பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. அவசர நிலைக்கான 911 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வசதிகள் இல்லை.

மருத்துவமனைகளிலும் அந்த அளவுக்கு படுக்கை வசதிகள் கிடையாது. உதாரணமாக புரூக்ளின் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 400 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். அதனால் தொலைபேசியில் சிகிச்சை கோரி அழைப்போரில் யாருக்கு மருத்துவ சிகிச்சை உடனடியாக தேவைப்படுகிறது என்பதை மருத்துவ பணியாளர்கள் முடிவு செய்து பட்டியலிடுகிறார்கள். பலரை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்துகிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய ஏராளமானோர் வேறு வழி இல்லாமல் அடிப்படையான சிகிச்சையை மட்டும் பெற்றுக் கொண்டு வீடு திரும்ப வேண்டியிருக்கிறது.

ஆளுநர் Andrew Cuomo கருத்துப்படி இப்போது நியூயார்க் மாநிலம் உச்சநிலையை அடைந்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இந்த மோசமான நிலை எப்போது?, யாரால் முடிவுக்கு வரும் என்பதை கூற முடியவில்லை.


Tags : Doctors ,Corona ,New York ,America , Corona, New York, Fighting Physicians, USA
× RELATED நியூயார்க் டைம்ஸ் சதுக்க திரையில்...