×

தேவையில்லாமல் பைக்கில் சுற்றித்திரிந்தவர்களுக்கு நூதன தண்டனையுடன் கொரோனா விழிப்புணர்வு: காட்பாடியில் பயிற்சி டிஎஸ்பி அதிரடி

வேலூர்: காட்பாடியில் தேவையில்லாமல் பைக்கில் சுற்றித்திரிந்தவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி பயிற்சி டிஎஸ்பி லிசா ஸ்டெபிலா தெரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், தேவையின்றி வெளியே வருவதை தடுக்கவும் காவல்துறை சார்பில் 52 இடங்களில் பேரிகார்டுகள் வைத்து தடுப்பு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் காட்பாடி சப்-டிவிஷனுக்கு டிஎஸ்பிக்கள் துரைபாண்டி, ரவிச்சந்திரன், பயிற்சி டிஎஸ்பி லிசா ஸ்டெபிலா தெரஸ் ஆகியோர் தலைமையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மதியம் 12 மணியளவில் காட்பாடி சித்தூர் பஸ் நிலைய பகுதியில் பயிற்சி டிஎஸ்பி லிசா ஸ்டெபிலா தெரஸ்  தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தேவையில்லாமல் குழந்தைகளுடன் பைக்குகளில் வெளியே சுற்றித்திரிந்து கொண்டு இருந்தவர்களை மடக்கி பிடித்தார். இவ்வாறு பிடிபட்ட 15க்கும் மேற்பட்டவர்கள் தேவையின்றி வெளியே சுற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு நூதன தண்டனையை பயிற்சி டிஎஸ்பி லிசா ஸ்டெபிலா தெரஸ்  வழங்கினார். அதாவது, சிக்கியவர்கள் கொரோனா வைரஸ் குறித்தும், அதன் தாக்கம் குறித்தும் தனித்தனியாக அங்கிருந்த மற்றவர்களுக்கு விளக்கி கூற வேண்டும் என்றார்.
அதன்படி ஒவ்வொருவருக்கும் கொரோனா வைரசை தடுக்க நாம் செய்ய வேண்டிய பணிகள் என்ன? அதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முறைகள், கைகளை கழுவும் முறைகளும், தேவையில்லாமல் வெளியே சுற்றக்கூடாது. குழந்தைகளை வெளியே அழைத்து செல்லக்கூடாது. வெளியே சென்றால் முக கவசம் மற்றும் கிருமி நாசினியை பயன்படுத்தி கொள்ள வேண்டும் போன்ற அறிவுரைகளை பொதுமக்களே கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து இனிமேல் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து பயிற்சி டிஎஸ்பி அனுப்பி வைத்தார்.  

பெங்களூரில் இருந்து பைக்கில் வந்த  நிறைமாத கர்ப்பிணி
காட்பாடியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவர் பெங்களூரில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி தவித்து வந்துள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி மற்றும் இரு குழந்தைகள் ஒரு நாய் குட்டியை பைக்கில் அழைத்து கொண்டு நேற்று அதிகாலை 5 மணியளவில் பெங்களூரில் இருந்து கிளம்பியுள்ளார். தமிழக- கர்நாடக எல்லையில் பரிசோதனை செய்து அங்கிருந்து தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். நேற்று மதியம் 12 மணியளவில் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் பைக்கில் வந்த இவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த பயிற்சி டிஎஸ்பி லிசா ஸ்டெபிலா தெரஸ்  தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், காட்பாடியை சேர்ந்தவர்கள் என்பதும்,  பிரசவத்துக்கு டாக்டர்கள் நாள் குறித்து கொடுத்துள்ளதாகவும், பெங்களூரில் போதிய வருமானம் இல்லாததாலும், போக்குவரத்தும் இல்லை. இதனால் சொந்த ஊருக்கு பைக்கில் வந்து விட்டதாக தெரிவித்தனர். இவ்வளவு  தூரம் நிறைமாத கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுடன் பைக்கில் அழைத்து வந்துள்ளாய்? நடுவில் ஏதாவது நடந்திருந்தால் என்ன செய்வது? இனி இதுபோன்ற தொலைதூர பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்.நீண்ட தூரம் வந்ததால் வீட்டிற்கு சென்றவுடன் டாக்டரிடம் சென்று நிறைமாத கர்ப்பிணிக்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

Tags : Bike Riders for Unnecessary Punishment for Coronation Awareness: Wildlife Training DSP Action , Coronation , Unnecessary, Punishmen,DSP ,Action
× RELATED தமிழ்நாட்டில் இரவு 7-மணி வரை 72.09 % வாக்குகள் பதிவாகி உள்ளன