×

சேலம் மாவட்டத்தில் 12 நாளில் 1000 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு: பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் கவலை

சேலம்: கொரோனா வைரஸ் பீதியால் சேலம் மாவட்டத்தில் 1000 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜவுளி மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.உலகளவில் பல நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவலால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வகையில் சேலம் மாவட்டத்தில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதியால் தமிழகத்தில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். அவர்கள் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். வணிக நிறுவனங்களை நடத்தி வரும் உரிமையாளர்கள் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

இந்த வகையில், சேலம் மாவட்டத்தில் ஜவ்வரிசி, ஸ்டார்ச், வெள்ளி, நெல், மாம்பழம், இரும்பு கம்பி உற்பத்தி, சின்டெக்ஸ் டேங்க், சில்வர், அலுமினியம், காப்பர், ஜவுளி ஏற்றுமதி உள்பட பல தொழில்கள் பிரதான தொழிலாக இருந்து வருகின்றன. இந்த தொழிலை நம்பி பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 25ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நேற்று வரை 12 நாட்கள் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 9 நாட்கள் உள்ளன. இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இதன் காரணமாக ஏப்ரல் 14ம் தேதி ஊரடங்கு உத்தரவு நிறைவு என்பது சந்தேகமாக தான் இருக்கிறது. கடந்த 25ம் தேதி நேற்று வரை 12 நாளில் பல நூறு கோடி மதிப்பில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜவுளி மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த ஜவுளி மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் கூறியதாவது:ெகாரோனா வைரஸ் பரவலால் இந்தியாவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்து ஜவுளிகள் வெளி நாட்டிற்கும், மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. அதேபோல் ஸ்டார்ச், ஜவ்வரிசி உள்ளிட்டவைகள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.இதேபோல் கோழித்தீவனம், மஞ்சள், வெள்ளி உள்பட பல்வேறு பொருட்கள் வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 25ம் தேதியில் இருந்து தொழிற்சாலை, வணிக நிறுவனம், விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

கடந்த 12 நாளில் மட்டும் சேலம் மாவட்டத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒன்பது நாட்களும் இதே நிலை நீடித்தால் ₹2 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் உற்பத்தி இல்லாததால் உரிமையாளர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வங்கியில் கடன் வாங்கியவர்கள் கடனை அடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஏப்ரல் 14ம் தேதியோடு ஊரடங்கு நிறைவு பெற்றால் சந்தோஷம். மீண்டும் ஊரடங்கு என்றால் வணிகர்கள் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திப்பார்கள். அவர்கள் இதில் இருந்து மீண்டு எழுவதற்கு பல மாதங்கள் ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : Salem District ,Owners , Salem ,District ,trades ,Rs 1000 ,12 days
× RELATED காதல் மனைவிக்கு தெரியாமல்...