×

ஏரியில் ரசாயனம் கலந்ததால் ஆத்திரம் மீன்களுக்கு தீவனம் ஏற்றி வந்த 2 லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்: பெரணமல்லூரில் பரபரப்பு

பெரணமல்லூர்: பெரணமல்லூர் அருகே ஏரியில் ரசாயனம் கலந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மீன்களுக்கு தீவனம் ஏற்றி வந்த 2 லாரிகளை சிறைபிடித்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பேரூராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி தண்ணீரை நம்பி 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது.இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மீன்களை வளர்க்க ஏலம் எடுத்துள்ளதாக கூறி சிலர், ஏரியில் மீன் குஞ்சுகளை கொண்டு வந்து விட்டனர். மேலும், மீன் குஞ்சுகள் வேகமாக வளர்வதற்காக ஏரி தண்ணீரில் ரசாயன மருந்துகளை கலந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஏலம் எடுத்தவர்கள், கடந்த வாரம் புகார் செய்த நபரை சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் பெரிய ஏரியில் சரக்குகளுடன் 2 லாரிகள் நின்று கொண்டிருந்தது. அவ்வழியாக சென்ற கிராம மக்கள் விசாரித்ததில், ஏலம் எடுத்தவர்கள் கடலூரில் இருந்து மீன்களுக்கான தீவனம் மற்றும் ரசாயன மருந்துகளை லாரிகளில் வரவழைத்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 2 லாரிகளையும் சிறைபிடித்தனர். மேலும், கொரோனா நோய்த்தொற்று பரவலாக இருக்கும் வேளையில் எப்படி வந்தீர்கள்? ஏரியில் மீன்களை வளர்க்க ஏலம் எதுவும் விடப்படவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த பெரணமல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சமரசம் பேசினர். பின்னர், தீவனம் ஏற்றி வந்த 2 லாரிகளையும் கிராம மக்களிடம் இருந்து விடுவித்து திரும்பி செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

ஆனால், சிறிது தூரம் சென்ற லாரிகள், அஸ்தினாபுரம் சித்தேரி பகுதிக்குள் மறைவான இடத்தில் சென்று நின்றது. இதை கவனித்த கிராம மக்கள் மீண்டும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த போலீசார் லாரி டிரைவர்களை எச்சரித்து, கடலூருக்கு திருப்பி அனுப்பினர். கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : Residents ,Peramanallur ,rage Villagers ,lake , Villagers, captured, lake
× RELATED ஆந்திராவில் ஊருக்குள் புகுந்த 70...