×

தேன்கனிக்கோட்டை வனத்தில் கால் முறிந்த யானைக்கு தொடர் சிகிச்சை: உடல் நிலை சற்று தேறியது

கிருஷ்ணகிரி: கால் முறிவால் அவதிப்பட்டு வரும் யானைக்கு தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை பகுதியில் கூட்டத்துடன் சுற்றிய 15 வயது ஆண் யானை, கடந்த 10 நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதிக்கு சென்றது. அங்கு கிணறு ஒன்றில் தவறி விழுந்த யானைக்கு இடதுபுற பின்னங்கால் முறிந்தது. அந்த யானையை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். தொடர்ந்து நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த அந்த யானை கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள துடுகனஅள்ளி அடுத்த திம்மராயனஹள்ளி கிராமத்தில் உள்ள மாரியப்பன் என்பவரது மாந்தோப்பில் நேற்று முன்தினம் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி உத்தரவின் பேரில், வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அதே போல வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் அங்கு சென்று யானையின் கால் வலியை போக்க ஊசிகளை போட்டனர். அத்துடன் பழத்தில், மருந்து வைத்து கொடுத்தனர்.

அதன் பிறகு யானை மெல்ல காலை ஊன்றி நின்றது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கிரேன் வரவழைக்கப்பட்டு, அந்த யானையை தூக்கி, ஒரு வேனில் ஏற்றினார்கள். பிறகு அந்த யானையை தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யூர் அருகே கோவை பள்ளம் என்ற இடத்திற்கு கொண்டு சென்று யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி கூறுகையில், யானைக்கு காலில் உள்ள காயம் ஆற மருந்து கொடுக்கப்பட்டும், வலி இல்லாமல் இருக்க ஊசியும் போடப்பட்டுள்ளது. தற்போது யானையின் உடல் நிலை சற்று தேறி உள்ளது. அதை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சிகிச்சை அளிப்பதற்காக, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு கொண்டு வந்துள்ளோம். சிகிச்சைக்கு பிறகு யானை குணம் அடைந்ததும், அதை வனப்பகுதிக்குள் விட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : forest ,Thenkanikottai , Continuous ,treatment , broken, elephant , little ,better
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...