×

புள்ளி விவரங்களின் அடிப்படையில் மின் விளக்குகள் அணைக்கப்பட்ட நிகழ்விற்கு தென்மாநிலங்களில் வரவேற்பு குறைவு

சென்னை : தென்மாநிலங்களில், அதாவது தெற்கு மண்டலத்தில் மின் நுகர்வு அளவு இயல்பான அளவைவிட 5,978 மெகாவாட் மட்டுமே குறைந்துள்ளது.பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, இந்திய மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக நேற்று  நாடு முழுவதும் மக்கள் இரவு 9 மணி அளவில் மின் விளக்குகளை அணைத்து அகல்விளக்கு தீபங்கள் ஏற்றி ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக் காட்டினர். குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்நிலையில்  நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மின் விளக்குகளை அணைத்ததன் மூலமாக நாடு முழுவதும்  8.45மணிக்கு இருந்த மின் தேவையைவிட 9.10மணிக்கு 31,089 மெகாவாட் குறைந்ததாக நாட்டின் தினசரி மின்சார தேவையை திட்டமிடும் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (POSOCO), தெரிவித்துள்ளது. இதனால் மின் தொடரமைப்பில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும்  (POSOCO) கூறியுள்ளது.

POSOCO வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், நேற்று இரவு 8.45 மணிக்கு 1,16,887 மெகாவாட் ஆக இருந்த மின் நுகர்வானது படிப்படியாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.இரவு 9 மணிக்கு 15,000 மெகாவாட்டும், 9.10 மணிக்கு 31,089 மெகாவாட்டும் மின் பயன்பாடு குறைந்துள்ளது.இரவு 9.20 க்கு 21,092 மெகாவாட்டுவும், அதற்கு அடுத்த 10 நிமிடங்களில் 8,080 மெகாவாட்டும் மின் நுகர்வு குறைந்துள்ளது.
இந்த நிகழ்வின்போது தென்மாநிலங்களில், அதாவது தெற்கு மண்டலத்தில் மின் நுகர்வு அளவு இயல்பான அளவைவிட 5,978 மெகாவாட் மட்டுமே குறைந்துள்ளது.தென் மண்டலம் என்பது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பாண்டிச்சேரியைக் குறிக்கும்.

அதேநேரம் 8.45 மணிக்கு இருந்த மின் தேவையானது 9.10மணிக்கு வடக்கு மண்டலத்தில் 10,413 மெகாவாட், மேற்கு மண்டலத்தில் 8,464 மெகாவாட், கிழக்கு மண்டலத்தில் 6,136 மெகாவாட் அளவுக்கு மின் பயன்பாடு குறைந்திருந்தது.இந்த நிகழ்வின்போது மின் உற்பத்தி மற்றும் விநியோக தொடரமைப்பு பாதிப்படையக் கூடாது என்பதற்காக நேற்றிரவு 8.45 மணியில் இருந்து 9.10 மணி வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் மின் உற்பத்தி கணிசமாகக் குறைக்கப்பட்டிருந்தது.

Tags : event ,South , Electricity lights, Southlands, PM Modi, Welcome, Decline
× RELATED உங்க 10 ஆண்டு ஆட்சியில் எல்லாமே போச்சு…...