×

உணவு, குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆபத்து: கே.ராசியப்பன், ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் உரிமையாளர் நலச்சங்க செயலாளர்

* தற்போது 144 ஊரடங்கு உத்தரவால் காய்கறிகள் வரத்து மிகவும் குறைந்து குறைந்த அளவு விற்பனைக்கு வருகிறது. இதன்மூலம் தினமும் சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி காய்கறி மார்க்கெட் தென்தமிழகத்தில் இரண்டாவது பெரிய மார்க்கெட் ஆகும். இந்த மார்க்கெட் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் பழமையான சந்தை. இங்கு 150க்கும் மேற்பட்ட காய்கறி மொத்த விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள், சுமார் ஆயிரம்கணக்கானவர் கள் பணிபுரிந்து வருகின்றனர்.  மார்க்கெட்டிற்கு ஒட்டன்சத்திரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கள்ளிமந்தயம், அம்பிளிக்கை, இடையகோட்டை, மார்க்கம்பட்டி, விருப்பாச்சி, சத்திரப்பட்டி, ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மதுரை, தேனி, வத்தலக்குண்டு,
கொடைக்கானல், திண்டுக்கல், கரூர், அரவக்குறிச்சி,

பள்ளபட்டி, மணப்பாறை, திருநெல்வேலி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த தக்காளி, முருங்கை, வெங்காயம், பீன்ஸ், கேரட், கத்தரி, பீட்ரூட், தேங்காய், மிளகாய், எலுமிச்சை, வாழைக்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். மார்க்கெட்டிலிருந்து தினமும் 200க்கும் மேற்பட்ட லாரிகளில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் காய்கறிகள ்அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்த 144 தடை உத்தரவால் மாவட்ட நிர்வாகம் மூலம் மார்க்கெட் கடைகளுக்கு விடுமுறை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.

மார்க்கெட் தொடர்ந்து பல நாட்கள் மூடப்பட்டு வருவதால் ஏற்பட்டுள்ள கஷ்டங்கள்  சொல்ல முடியாதது; விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை அறுவடை செய்து விற்க முடியாமல் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாவார்கள் என்று, விவசாயிகள் மற்றும் கடை வியாபாரிகள் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். அதன்பேரில் சில நிபந்தனைகளுடன் தமிழ்நாட்டில் மட்டும் காய்கறி விற்பனை செய்யலாம்  என்றும் மார்க்கெட்டை மூன்றாகப் பிரித்து தக்காளி மற்றும் சில்லரை காய்கறிகளை தங்கச்சியம்மாபட்டியிலும், வெங்காயத்தை காந்தி மார்க்கெட்டிலும், ஒட்டன் சத்திரம் பேருந்து நிலையத்தில் முருங்கை வாழை உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனை செய்யலாம் என்று சில நிபந்தனைகளை விதித்து அரசு அனுமதி அளித்திருந்தது.

 அதன்பேரில் தற்போது மார்க்கெட் மூன்றாகப் பிரிக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது. விவசாயிகள் தங்கச்சியம்மாபட்டி மார்க்கெட்டிற்கு நீண்டதூரம் சென்று வரவேண்டும் என்று எண்ணி அருகிலுள்ள புதிய மார்க்கெட்டில் தங்கள் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட் பகுதிகளில் விவசாயிகள் வருகை குறைவாக உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 40 லாரிகளில் மட்டுமே விற்பனைக்கு வரும் காய்கறிகளை வியாபாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது 144 ஊரடங்கு உத்தரவால் காய்கறிகள் வரத்து மிகவும் குறைந்து குறைந்த அளவு விற்பனைக்கு வருகிறது. இதன்மூலம் தினமும் சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.

மேலும் இங்கு பணிபுரியும் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் தினசரி கூலியும் சொற்ப வருமானமாகவே உள்ளது. அரசு  அறிவித்த 21 நாட்களுக்குள் இந்த ஊரடங்கு உத்தரவு முடிந்துவிட்டால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின்  வாழ்வாதாரம் மேம்படும். ஊரடங்கு  உத்தரவை நீட்டிப்பு செய்தால், வரும் மாதங்களில் நகரில் உணவு பஞ்சம் மற்றும்  குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும், ஆகவே அரசு காந்தி மார்க்கெட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி  அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட தகுந்த நிதிஉதவி அளிக்க வேண்டும்.


Tags : Owens Secretary ,K.Rasiappan , Food, drinking water, famine, K.Rasiappan Ottanchathiram kanti nalaccanka Secretary-market owner
× RELATED கோடை விடுமுறையையொட்டி, கொடைக்கானலில்...