×

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காக்கும் வழி

சென்னை: யுவால் நோவா ஹராரி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர். இவரது ‘சேப்பியன்ஸ்’, ‘ஹோமோ டியஸ்’ ஆகிய நூல்கள் இதுவரை தமிழ் உட்பட 50க்கும் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு தலா கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனைப்படைத்துள்ளன. கோவிட் - 19 வைரஸ் தாக்குதலால் உலகமே பதட்டத்துக்கு ஆளாகி வரும் நேரத்தில் ‘டைம்ஸ்’ பத்திரிகையில் நீண்ட கட்டுரை ஒன்றை அவர் எழுதியிருக்கிறார். அதன் சுருக்கப்பட்ட வடிவம் இது.
14ம் நூற்றாண்டில் விமானங்களோ, உல்லாசக் கப்பல்களோ இல்லை. எனினும் கருப்பு மரண கொள்ளை நோய் பத்தாண்டுகளுக்குள் கிழக்காசியாவில் இருந்து வட ஐரோப்பா வரை பரவி, 7.5 கோடியில் இருந்து 20 கோடி வரை மக்களை கொன்றது. 1520, மார்ச் மாதம் ஃப்ரான்சிஸ்கோ டி இக்யுவா என்ற மனிதர், பெரியம்மை நோயுடன் மெக்சிகோவில் வந்திறங்கினார்.

அந்த காலத்தில் மத்திய அமெரிக்காவில் ரயில்களோ, பேருந்துகளோ ஏன் கழுதைகளோ கூட இல்லை. எனினும் டிசம்பருக்குள் பெரியம்மை, மத்திய அமெரிக்கா முழுவதையுமே நிலைகுலையச் செய்து, மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மனிதர்களைக் கொன்றது. 1918ல் ஒரு குறிப்பிட்ட வீரிய ரக ஃப்ளூக் காய்ச்சல், சில மாதங்களுக்குள்ளாகவே உலகின் இண்டு இடுக்குகளுக்கு பரவி, 50 கோடி மக்களை தாக்கியது. அன்றைய மக்கள் தொகையின்படி இது மனித இனத்தின் கால் விகிதம். இந்த கொள்ளை நோய் இந்தியாவில் 5% மக்களைக் கொன்றது. தாஹிதி தீவில் 14% பேர் இறந்தனர். சமோவாவில் 20%. மொத்தத்தில் ஓர் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட பத்து கோடி மக்களை கொன்று குவித்தது இந்தக் கொள்ளைநோய். இது, முதலாம் உலகப்போர் நான்கு ஆண்டுகளில் கொன்றழித்த மக்கள் தொகையை விட அதிகம்.

இன்றைய உலகளாவிய போக்குவரத்து என்பது 1918ஐ காட்டிலும் மிக வேகமானது. ஒரு வைரஸ் 24 மணி நேரத்துக்குள் பாரிஸிலிருந்து டோக்யோவுக்கோ மெக்சிகோ நகரத்திற்கோ சென்றுவிட முடியும். மிகக்கொடிய நோய்களான எய்ட்ஸும், எபோலாவும் தாக்கியபோதும், 21ம் நூற்றாண்டில் கொள்ளை நோய்கள், கற்காலம் தொடங்கி முன்னெப்போதையும் விட மிக குறைவான விகித மக்களையே கொன்றிருக்கின்றன. ஏனெனில் நோய்க் கிருமிகளுக்கு எதிராக மனிதர்களிடம் இருக்கும் மிகச்சிறந்த ஆயுதம் தனிமைப்படுதல் அல்ல; தகவலே. மருத்துவர்களுக்கும் நோய்க் கிருமிகளுக்கும் இடையிலான இந்தப் போரில் மனிதம் வென்று கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம், நோய்க் கிருமிகள் கண்மூடித்தனமான மரபணுமாற்றங்களை நம்பிக் கொண்டிருக்க, மருத்துவர்களோ தகவல்களை அறிவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துகின்றனர்.

14ம் நூற்றாண்டில் கருப்பு மரணம் தாக்கியபோது அதன் காரணம் என்னவென்றோ அதற்கான தீர்வு என்னவென்றோ மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கடவுளையோ, பேய்களையோத்தான் குறை சொன்னார்கள். பாக்டீரியாக்களோ வைரஸ்களோ இருப்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அதனால், கருப்பு மரணமோ, பெரியம்மையோ தாக்கினால் அதிகாரிகள் செய்ததெல்லாம் கூட்டுப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்வதாகத்தான் இருந்தது. அது பயனளிக்கவில்லை; மாறாக, மக்கள் அதிக அளவில் ஒரே இடத்தில் கூடியதால் தொற்றுகள் பெருமளவில் பரவின. கடந்த நூற்றாண்டில், உலகம் முழுவதும் இருந்து விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் செவிலியர்களும் தாங்கள் அறிந்த தகவல்களை தொகுத்து, கொள்ளை நோய்க்குப் பின்னால் உள்ள இயங்குமுறை குறித்தும், அதனை எதிர்கொள்வது குறித்தும் புரிந்துகொண்டனர்.

அன்றைய மனிதர்களால் கருப்பு மரணத்துக்கான காரணத்தை கடைசி வரை கண்டுபிடிக்கவே இயலவில்லை. ஆனால், இன்று இரண்டு வாரங்களுக்குள்ளாக, நம் விஞ்ஞானிகளால், புதிய கொரோனா வைரஸை அடையாளம் கண்டு, அதன் மரபுத்தொகுப்பினை வரிசைப்படுத்தி, மனிதர்களிடம் நோய் பாதிப்பைக் கண்டறிய நம்பகமான ஒரு சோதனையையும் உருவாக்க முடிந்திருக்கிறது. கொள்ளை நோய்களுக்கான காரணம் என்ன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவுடன் அவற்றை எதிர்கொள்வது எளிதாகிவிட்டது. தடுப்பூசிகள், நோய் எதிர்ப்பு நுண்ணுயிர் மருந்துகள், மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவ கட்டமைப்பு ஆகிய அனைத்தும் சேர்ந்து இந்த கண்ணுக்குத் தெரியாத நோய்க்கிருமிகளுக்கு எதிரான போரில், நமது கைகளை வலுப்பெற செய்திருக்கின்றன.

1967ல் கூட பெரியம்மை 1.5 கோடி மக்களை தாக்கி 20 லட்சம் பேரை கொன்றது. ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் உலகளாவிய பெரியம்மை தடுப்பூசி இயக்கம் வெற்றிகரமாக செயல்பட்டு, 1979ல் உலக சுகாதார அமைப்பு, பெரியம்மைக்கு எதிரான போரில் மனித இனம் வென்றுவிட்டதாகவும் பெரியம்மை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் அறிவிக்கும் அளவுக்கு வளர்ந்தது. 2019ல் ஒருவர் கூட பெரியம்மையால் தாக்கப்படவோ இறக்கவோ இல்லை. எல்லையை பாதுகாத்தல் இப்போதைய கொரோனா வைரஸ் கொள்ளை நோயைப் பற்றி வரலாறு நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன? முதலாவதாக, எல்லைகளை மூடுவதன் மூலம் நோய்ப் பரவலை தடுக்க முடியாது. உலகமயமாக்கலுக்கு வெகு முன்பே, மத்திய காலகட்டத்தில் கூட, கொள்ளை நோய்கள் வேகமாகப் பரவின என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, நம்பகமான அறிவியல் தகவல்களை பகிர்ந்து கொள்வதும் உலகளாவிய ஒற்றுமையுமே உண்மையான பாதுகாப்பை நமக்கு தரும். இன்று சீனா உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் குறித்த பல முக்கியான பாடங்களை கற்றுத்தர இயலும். கொள்ளை நோய்களைப் பற்றி மக்கள் உணர வேண்டிய ஒன்று உண்டு. ஒரு நாட்டுக்குள் நோய் பரவுவது முழு மனித இனத்துக்குமே பேராபத்து. ஏனெனில் வைரஸ்கள் பரிணாம வளர்ச்சி அடைகின்றன. கொரோனா போன்ற வைரஸ்கள், வவ்வால் போன்ற விலங்குகளில் உருவாகின்றன. அவை மனிதர்களுக்குத் தாவும்போது, தொடக்கத்தில் மனித உடலுக்கு அவை பொருந்தாது. மனித உடலினுள் அவை பல்கிப் பெருகும்போது, அவற்றின் மரபணுக்களில் சில, திடீர் மாற்றங்களை அடைகின்றன. பெரும்பாலான திடீர்மாற்றங்கள் பாதிப்பில்லாதவை.

ஆனால், அவ்வப்போது சில திடீர் மாற்றங்கள் இவ்வைரஸை மென்மேலும் தொற்றக் கூடியதாகவும், மனித நோய் எதிர்ப்பு மண்டலத்தை எதிர்த்து நிற்கும் வல்லமை கொண்டதாகவும் மாற்றமடைய செய்கின்றன. வைரஸ்களுக்கு எதிரான இந்த போரில் மனித இனம் தனது எல்லைகளை கவனமாக காக்க வேண்டியது அவசியம். நாடுகளுக்கு இடையிலான எல்லைகளை அல்ல. மனிதர்களுக்கும் வைரஸ்களுக்கும் இடையே இருக்கும் எல்லைகள் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும்.
பெரும்பாலான சுகாதார அமைப்புகள் இந்த எல்லைக்கோட்டின் மதில்களாகவே செயல்படுகின்றன. செவிலியரும், மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் காவலர்களாக ரோந்து வந்து எதிரிகளை விரட்டுகின்றனர். ஆனால், இந்த எல்லையின் பெரும் பகுதிகள் இன்னமும் காவலின்றியே இருக்கின்றன. உலகமெங்கும் கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் அடிப்படை சுகாதார வசதிகளின்றி வாழ்கின்றனர். இது நம் அனைவருக்குமே ஆபத்து.

சுகாதாரம் என்பதை அவரவர் தேசிய அளவிலேயே சிந்திக்க நாம் பழகி இருக்கிறோம். ஆனால், அடிப்படை சுகாதார வசதிகளற்ற ஈரானியர்களுக்கும் சீனர்களுக்கும் வழங்கப்படும் மேம்பட்ட சுகாதார சேவைகள், வளர்ந்த நாடுகளான இஸ்ரேலையும் அமெரிக்காவையும் கூட கொள்ளை நோய்களில் இருந்து காக்க உதவும்.

தலைமையற்ற உலகம்
இன்று மனித இனம், பெரும் சிக்கலை சந்திப்பதற்கு கொரோனா வைரஸ் மட்டும் காரணம் அல்ல; மனிதர்களுக்கு இடையே உள்ள நம்பிக்கையின்மையும் ஒரு காரணம். கடந்த சில ஆண்டுகளில், பொறுப்பற்ற அரசியல்வாதிகள் அறிவியலின், அரசின், பன்னாட்டு ஒத்துழைப்பின் மீதான நம்பிக்கைகளை திட்டமிட்டுக் குலைத்திருக்கின்றனர். விளைவாக, நம்மை ஊக்குவித்து, ஒன்றுதிரட்டி, ஒரு ஒருங்கிணைந்த பன்னாட்டு எதிர்வினைக்கு நிதி திரட்டக்கூடிய நல்ல தலைவர்கள் இல்லாமல் நாம் இன்று இந்த பெரும் சிக்கலை சந்திக்கிறோம்.

இன்று, பிறநாட்டு மக்களின் மீதான அச்சம், தனிமைப்படுதல், நம்பிக்கையின்மை ஆகியவையே பெரும்பாலான நாடுகளின் இயல்பாக இருக்கிறது. நம்பிக்கையும் உலக ஒற்றுமையும் இன்றி இந்த கொரோனா வைரஸ் சிக்கலை நம்மால் தடுக்க முடியாது. இவ்வாறு யுவால் நோவா ஹராரி தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : coronavirus attacks , Coronavirus, Yuval Nova Harari, Protective Way
× RELATED சென்னையில் 30 முதல் 39 வயது வரையிலான நபர்களை அதிகம் தாக்கும் கொரோனா தொற்று