×

திருப்பத்தூரில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினர் வீடு வீடாக சென்று முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள்: வாழ்வாதாரம் கேள்விக்குறியானதால் புதிய முயற்சி

திருப்பத்தூர்:  கொரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பழைய முறைப்படி மீண்டும் வீடு வீடாகச் சென்று தொழிலாளர்கள் முடி திருத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், அழகு நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். தற்போது மக்கள் வீட்டில் முடங்கி உள்ளதால் எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.  விவசாயிகள் பயிரிட்ட விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் பாழாகி வருகின்றன.இதில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஆண்கள், பெண்கள் தங்கள் அழகை மேம்படுத்த அழகு நிலையங்களில் விதவிதமான சிகை அலங்காரங்கள் செய்து வந்தனர். தற்போது ட்ரெண்டிங் எனப்படும் இளைஞர்கள் பலவிதமான முடி திருத்தங்களை செய்து வந்தனர்.

இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவால் சலூன் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டில் இருக்கும் ஆண்கள் சலூன் கடைக்கு செல்ல முடியாமல் உள்ளனர். இதனால் அவர்கள் முகம் மற்றும் தலை முடி சீர் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் முடிதிருத்தும் பொருட்களை எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று பழைய கிராமப்புற வாழ்க்கையில் ஆன புளியமரத்தடியிலும், வீடுகள் முன்பாகவும் சென்று ஆண்கள், குழந்தைகளுக்கு முடி திருத்தும் தொழில் செய்து வருகின்றனர். முந்தைய காலத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வீடுகளுக்கும் வந்து முடிதிருத்தி அவர்கள் கொடுக்கும் தானியங்கள், பொருட்களை வாங்கிச் சென்றனர். அந்த நிலைமைக்கு தற்போது இந்த தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது முடிதிருத்தும் தொழிலாளர்கள் வீடு வீடாகச் சென்று திருப்பத்தூர் பகுதியில் உள்ள சித்தேரி, விஷமங்கலம், நகரப்பகுதி சென்று குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு முடிதிருத்தும் செய்து வருகின்றனர். இதுகுறித்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் கூறுகையில், ‘இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. அரசு பணம் உள்ளிட்ட பொருட்கள் கொடுத்தாலும் எங்கள் குடும்பத்திற்கு அது போதுமானதாக இல்லை. ஆகையால் நாங்கள் இப்போது வீடு வீடாகச் சென்று முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.  ஒரு சிலர் செய்த தொழிலுக்கு பணம் தருகின்றனர்.

கிராமப்புற பகுதிகளில் நெல், பருப்பு உள்ளிட்ட தானியங்களையும் வழங்குகின்றனர். பழைய நிலைமைக்கு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சென்றுள்ளோம். மேலும் திருமண நாட்களில் நாங்கள் மேளம், நாதஸ்வரம், கச்சேரிகளுக்கு செல்வோம். அதுவும் தற்போது இல்லாத காரணத்தினால் எங்கள் குடும்பம் அனைத்தும் வறுமையில் வாடி வருகிறது. இதற்காக அரசு எங்களுக்கு தனியாக நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.பழைய காலத்திற்கு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சென்ற நிலைமை மற்ற தொழிலுக்கும் நேரிடுமோ என்ற அச்சத்தில் மற்ற தொழிலாளர்களும் உள்ளனர். எனவே, இந்த நிலைமை வராமலிருக்க பொதுமக்கள் அரசு அறிவித்தபடி ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து, தனிமைப்படுத்தி இந்த கொடூர கொரோனா வைரசை விரட்ட ஒத்துழைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Thiruppathur ,residence ,state , Thiruppathur restored, former, condition
× RELATED திருப்பத்தூர் மாவட்டம்...