×

மூணாறு அருகே 1,300 லி. கள்ளச்சாராயம் பறிமுதல்

மூணாறு: மூணாறு அருகே 1,300 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் கைப்பற்றினர். ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து கடந்த 24ம் தேதி முதல் கேரள அரசின் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. 21 நாள் ஊரடங்கு முடியும் வரை மதுபான கடைகள் மூடப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இடுக்கி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை களை கட்ட துவங்கியது. கடந்த ஒரு வாரத்தில் மூணாறு அருகே உள்ள குமுளி ஆறாம் மைல் பகுதியில் 2 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம், ராஜகுமாரி பகுதியில் 330 லிட்டர் கள்ளச்சாராயம் மூணாறு எல்லப்பட்டி எஸ்டேட் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் கள்ளச்சாராயத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மூணாறு அருகே அமைந்துள்ள ராமாக்கல் மெட்டு வியூ பாயிண்ட் பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் உடும்பன்சோலை வட்டார இன்ஸ்பெக்டர் டோமி தலைமையில் போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் காடுகளுக்கு இடையே அமைந்துள்ள பாறைகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,300 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். பதுக்கியவர்களை தேடி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இடுக்கி மாவட்டத்தில் 3,665 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல் மற்றும் புகார்களை, 94964-99371 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என புலனாய்வுத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.



Tags : Munnar , 1,300 l near Munnar, Confiscation ,counterfeit, goods
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு