×

நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை மக்களுக்கு போதித்தவர்: சமண சமய மக்களுக்கு முதல்வர் பழனிசாமி மகாவீர் ஜெயந்தி வாழ்த்து

சென்னை: சமண சமய மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகாவீர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti), சமண சமயத்தின் 24-வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக்  குறிப்பதாகும். மகாவீரரின் பிறந்த நாள் விழாவை, ஒவ்வொரு ஆண்டின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் சைத்திர மாதம், திரியோதசி திதி அன்று சமணர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நாளை (6-4-2020) மகாவீர் ஜெயந்தி  விழா கொண்டாடப்படவுள்ளது. மகாவீரர் பிறந்த நாளை இந்தியாவில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அன்று இந்தியாவில் இறைச்சிக் கடைகளும், மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அரசு மற்றும்  மாநில அரசுகளும் ஆணையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாவீர் ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், பகவான் மகாவீரரின் பிறந்த தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம்  கனிந்த “மகாவீர் ஜெயந்தி” நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அகிம்சையை அடிப்படையாக கொண்ட சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரராக விளங்கிய பகவான் மகாவீரர், மூன்று ரத்தினங்கள் எனப்படும் நன்னம்பிக்கை, நல்லறிவு,  நன்னடத்தை ஆகியவற்றை மக்களுக்கு போதித்ததோடு, பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையே அறம் என்றுரைத்து, வாய்மையைப் போற்றி, ஆசைகளைக் களைந்து, பற்றற்ற நிலையைக் கடைப்பிடித்து, அறநெறியினை பின்பற்றி வாழ்ந்தார்.

இந்த இனிய நாளில், உலகில் அன்பும், அறநெறியும் தழைத்தோங்கிட மக்கள் அனைவரும் பகவான் மகாவீரரின் போதனைகளை மனதில் நிறுத்தி அன்பு வழியில், அறநெறி சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு,  சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய “மகாவீர் ஜெயந்தி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Palanisamy Mahavir Jayanti ,Palanisamy Mahavir Jayanthi , Palanisamy Mahavir Jayanthi congratulates the people of Samana Religion
× RELATED சமண சமய மக்களுக்கு முதலமைச்சர்...