×

டாஸ்மாக் விற்பனையாளர்கள் மூலம் ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு: பார் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

சென்னை: திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் இரவு காக்களூர் எரிமேடை அருகே சோதனை செய்தனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஒரு ஜீப் மற்றும் 2 பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஜீப்பில் 400 குவார்ட்டர் மற்றும் 120 பீர்பாட்டில்கள் இருந்தது. விசாரணையில், ஜீப் ஓட்டி வந்தவர் காக்களூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பார் வைத்து நடத்தும் வேப்பம்பட்டு தானு (34) என்பதும், உடன் 2 பைக்குகளில் வந்தவர்கள் அங்குள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளர்களாக பணிபுரியும் திருவள்ளூர் செந்தில் (42), புல்லரம்பாக்கம் ராமகிருஷ்ணன் (44) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில் கடந்த ஒரு வாரமாக டாஸ்மாக் கடையை இரவு நேரத்தில் திறந்து, பார் உரிமையாளருக்கு மதுபானங்களை, கடை விற்பனையாளர்கள் விற்று வந்ததை ஒப்புக்கொண்டனர்.
இதுகுறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் பொற்செல்வனுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர் கடையை வந்து பார்வையிட்டதில், டாஸ்மாக் கடையை கடந்த 24ம் தேதி பூட்டி சீல் வைக்கும்போது, ₹12 லட்சம் மதிப்பிலான சரக்குகள் இருந்ததும், அதில் ₹6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடுபோனதும் தெரியவந்தது.

அவர் கொடுத்த புகாரின்பேபரில் மது கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப், 2 பைக்குகள், 400 குவார்ட்டர், 120 பீர் மற்றும் ஒரு வாரமாக மதுபானங்களை திருடி விற்ற வகையில் வைத்திருந்த ₹4 லட்சம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பார் உரிமையாளர் மற்றும் டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

சுவரில் துளையிட்டு மதுபானம் கொள்ளை
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் நாகராஜ் கண்டிகை கிராமத்தில் டாஸ்மாக்கடை உள்ளது. ஊரடங்கால் கடை பூட்டப்பட்டிருந்த நிலையில் கடையின் பின்புற சுவரில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் 2 வாலிபர்கள் துளை போட்டு கடைக்குள் இருந்த மதுபாட்டில் அடங்கிய பெட்டிகளை வெளியே கொண்டு வந்தனர். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள், இருவரையும் மடக்கி பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரிய ஓபுளாபுரத்தை சேர்ந்த சகோதரர்களான ரமேஷ் (44), வேலு (33) ஆகிேயாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Theft ,dealers ,Task Force , Theft , liquor worth Rs.
× RELATED நாடாளுமன்றத் தொகுதி வாரியாக அதிமுக...