×

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கவேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கட்டிட தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை ரேஷன்கடைகளில் வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அருளரசு என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘ஊரடங்கால் தமிழகத்தில் கூலி வேலை செய்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள், டிரைவர்கள், குடும்ப அட்டை இல்லாதவர்கள் வேலையில்லாமல் உணவு, இருப்பிடம் இல்லாமல் முடங்கியுள்ளனர். இவர்களுக்கு ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் ஜூம் ஆப் என்ற வலைதளத்தின் மூலம் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, தமிழகத்தில் உள்ள பிற மாநில தொழிலாளர்கள், குடும்ப அட்டை இல்லாதவர்கள் உள்ளிட்டோருக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் உள்ளிட்டவைகளை வழங்குவது குறித்து கடந்த மார்ச் 27ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த பொருட்கள் எல்லாம் மாவட்ட கலெக்டர் மூலமாக வழங்கப்படும் என்றார். அப்போது மனுதாரர் நீதிபதிகளிடம், மாவட்ட கலெக்டரை அணுகி உணவு பொருட்களை வாங்க வேண்டும் என்பது இப்போதைக்கு கடினமான விஷயம். எனவே, ரேஷன் கடைகளில் பொருட்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களைப்போல் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் அரசு உணவு பொருட்களை வழங்க வேண்டும். இந்த உத்தரவை தலைமை செயலாளருக்கு அரசு வக்கீல் உடனடியாக வழங்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக வரும் 9ம் தேதி அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

Tags : High Court ,Tamil Nadu ,Unorganized Workers ,Outlet: State Supreme Court , NGO workers, ration shops, Govt
× RELATED தமிழகம் முழுவதும் கல்வி...