×

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் எல்லா அரசு வேலைகளும் இனி, உள்ளூர் மக்களுக்கே: உத்தரவை மாற்றியது மத்திய அரசு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அரசு வேலைகள் அனைத்தும், உள்ளூர் மக்களுக்கே வழங்கும் வகையில் தனது முந்தையை உத்தரவை மத்திய அரசு திருத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக கடந்தாண்டு அக்டோபரில் உருவாக்கப்பட்டன. சிறப்பு அந்தஸ்துடன் இருந்தபோது, காஷ்மீரில் வேறு மாநிலத்தினர் அரசு வேலையில் சேர முடியாது. இந்நிலையில், மத்திய அரசு கடந்த 1ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘ஜம்மு காஷ்மீர் அரசு பணியில் குரூப் 4 பதவிகள் வரை மட்டுமே, உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்படும்,’ என அறிவிக்கப்பட்டது. இதற்கு உள்ளூர் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து, இந்த உத்தரவை இரண்டே நாளில் மத்திய அரசு நேற்று மாற்றியது. நேற்று இரவு பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவில், ‘காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அனைத்து பதவிகளிலும் உள்ளூர் மக்களே பணியமர்த்தப்படுவர். காஷ்மீரைச் சேராதவர்கள் யாரும், காஷ்மீர் சிவில் சர்வீசில் பணி நியமனம் செய்ய தகுதியில்லை. உள்ளூர்வாசிகள் சட்டப்படி, ஜம்மு காஷ்மீரில் குறைந்தது 15 ஆண்டுகள் வசித்தவர்கள் அல்லது காஷ்மீரில் 7 ஆண்டுகள் படித்து 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் மட்டுமே உள்ளூர்வாசிகளாக கருதப்படுவர். குடிபெயர்ந்தவர்களாக பதிவு செய்தவர்களும் உள்ளூர்வாசிகளாக கருதப்படுவர். அகில இந்திய பணியில் உள்ளவர்கள், காஷ்மீரில் 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், அவர்களின் குழந்தைகளும் உள்ளூர்வாசிகள் பிரிவில் வருவார்கள்,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : government ,residents ,Jammu and Kashmir Union Territory ,natives ,Jammu and Kashmir Union Territories , Jammu and Kashmir, Union Territory, Central Government
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...