கோயில் திருவிழாக்கள் ரத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு: இசை கலைஞர்களுக்கு 5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்: முதல்வர் எடப்பாடிக்கு வேண்டுகோள்

சென்னை: ஊரடங்கு உத்தரவால் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து இசை கலைஞர்களுக்கும் 5 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இக்கால கட்டங்களில்தான் ஏப்.6ம் தேதி பங்குனி உத்திரம் வருகிறது. அப்போது, குல தெய்வ கோயில்கள் மற்றும் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கால் அனைத்து கோயில்களிலும் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சில கோயில்களில் எளிமையாக கொடியேற்றம் செய்து, திருவிழாவை முடித்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் இசை கலைஞர்கள், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு இசைவேளாளர் இளைஞர் பேரவை அறக்கட்டளை தலைவர் குகேஷ் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாதஸ்வரம், தவில் மற்றும் தாளம் வாசிக்கும் இசைக்கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வருடத்தில் மார்கழி, புரட்டாசி, ஆடி மாதங்களில் முற்றிலும் கச்சேரி மற்றும் மங்கள நிகழ்ச்சிகள் கிடையாது. மீதமுள்ள 9 மாதத்தில் நடக்கும் கச்சேரி மற்றும் மங்கள நிகழ்ச்சிகளில் வரும் சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு தான் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

 

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து கச்சேரிகளும், மங்கள நிகழ்ச்சிகளும் ரத்தாகி விட்டன. ஆகவே இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி அழிந்து வரும் இசைத்துறையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கும் உள்ளது. இசைக் கலைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி தமிழகத்தில் உள்ள அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் உதவி தொகையாக 5 ஆயிரம் உடனே வழங்கிட அனைத்து இசைக்கலைஞர்களின் ஒருமித்த குரலாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>