×

மலேசியாவுக்கு 151 பேர் பயணம்: அனுமதி மறுத்ததால் பெண் தற்கொலை முயற்சி: திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு

திருச்சி: திருச்சியிலிருந்து மலேசியா புறப்பட்ட மலிண்டோ விமானத்தில் 151 பயணிகள் நேற்று சென்றனர். இதில் 3வது தடவையாகவும் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பெண் தற்கொலைக்கு முயன்றார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடந்த 24ம் தேதி முதல் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மலேசியாவில் இருந்து திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுலா வந்த 300 பேர் மீண்டும் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் மலிண்டோ விமானம் மட்டும் அவசரகால சேவையாக கடந்த 1ம் தேதி முதல் கட்டமாக இயக்கப்பட்டது. இதில் 179 பயணிகளும், 2ம் கட்டமாக 2ம் தேதி 181 பயணிகளும் மலேசியா சென்றனர்.

இதையடுத்து 3ம் கட்டமாக நேற்று காலை 9.35 மணிக்கு மலிண்டோ விமானம் திருச்சிக்கு வந்து காலை 10.35 மணிக்கு மலேசியா புறப்பட்டது. இதில் 149 பயணிகள் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயணிகள் விமானத்துக்குள் அனுப்பப்பட்ட நிலையில், மலேசியா வாழ் தம்பதியான திருச்சியை சேர்ந்த சுப்ரமணியம், லலிதா வந்தனர். அவர்களை விமானத்தில் அனுமதிக்க மறுத்த விமான நிலைய அதிகாரிகள், அவர்களது பெயர் நீக்கம் செய்யப்பட்டதாகவும், விமானத்தில் செல்லமுடியாது என்றும் கூறினர். இதில் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென லலிதா, தங்களை விமானத்தில் அனுமதிக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என கூறி கையிலிருந்த தூக்க மாத்திரையை எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு மாத்திரையை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லலிதா கூறுகையில், மலேசியாவில் ஓட்டல் நடத்தி வரும் எனது கணவர் சுப்ரமணியம் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த பிப்ரவரி 29ம் தேதி திருச்சி வந்தார். அவரை பார்ப்பதற்காக நான் கடந்த 9ம் தேதி வந்தேன். நாங்கள் மார்ச் 17ம் தேதி ரிட்டன் விசா எடுத்திருந்தோம். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் செல்ல முடியவில்லை. கடந்த 2 முறை மலேசியா சென்ற சிறப்பு விமானத்தில் செல்ல முயன்றும் அனுமதிக்கவில்லை. இதனால் இன்று (நேற்று) செல்ல வந்து காத்திருந்தோம். விமானத்தில் இடமிருந்தும் எங்களை அனுமதிக்க மறுக்கின்றனர்.

அதிகாரிகள் வேண்டும் என்றே எங்களது பெயரை நீக்கி அலைக்கழிக்கின்றனர். இதுபற்றி ஏர்போர்ட் போலீசில் புகார் கூறினால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எங்களை இந்த விமானத்தில் அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்றார். தூதரக அதிகாரிகள் தம்பதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருவருக்கும் அனுமதி அளித்தனர். இதையடுத்து 151 பயணிகளுடன் விமானம் மலேசியா புறப்பட்டு சென்றது. 3 நாட்கள் இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் 511 பயணிகள் சென்றது குறிப்பிடத்தக்கது.



Tags : travelers ,suicide ,Malaysia , Malaysia, female suicide attempt, Trichy Airport
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...