×

கிருஷ்ணகிரி அணை அருகே கால் முறிந்து அவதிப்படும் யானை: துப்பாக்கி மூலம் ஊசி போட்டு சிகிச்சை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை அருகே, கால் முறிந்து அவதிப்படும் ஆண் யானைக்கு சிகிச்சை அளித்து, வனத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம், மேலுமலை பகுதியில் யானைகள் முகாமிட்டிருந்தது. இந்த யானை கூட்டத்தில் இருந்து 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனியாக பிரிந்து, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வந்தது. அங்குள்ள மலை அடிவாரத்தில் இருந்த அந்த யானை, ஒரு கிணற்றில் தவறி விழுந்தது. இதில் அந்த யானைக்கு இடது பின்னங்காலில் முறிவு ஏற்பட்டது. அந்த யானையை வனத்துறையினர் மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது.

மேலுமலையில் உள்ள கூட்டத்திற்கு செல்லாமல் சுற்றி வந்த அந்த ஒற்றை யானை, தற்போது கிருஷ்ணகிரி அணையின் பின்புறம், திம்மராயனஹள்ளி பகுதியில் ஒரு மாந்தோப்பில் தஞ்சம் அடைந்தது. தகவலறிந்து நேற்று வனத்துறையினர் அங்கு சென்றனர். மிக சோர்வாக காணப்பட்ட அந்த யானைக்கு குடிக்க தண்ணீர் வைக்கப்பட்டது. அத்துடன் பழங்கள், வாழைத்தார், தென்னை மர ஓலைகள் போடப்பட்டன. தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான வனக்குழுவினர் அங்கு வந்தனர்.

அவர்கள் யானையின் பின்னங்காலில் இருந்த வலியை போக்குவதற்கு மருந்து அடங்கிய 4 ஊசியை துப்பாக்கி மூலம் போட்டனர். அதன் பின்னர், சிறிது நேரத்தில் யானை சற்று வலி குறைந்து தெம்படைந்தது. தொடர்ந்து பழத்தில் மருந்தை வைத்து யானைக்கு கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு, யானையை கண்காணித்து வருகின்றனர்.



Tags : Krishnagiri Dam , Krishnagiri Dam, Elephant, Gun, Treatment
× RELATED சாத்தனூர் அணை நீர்மட்டம் 117.85 அடியாக...