×

வெளிநாடு, வெளிமாநிலம் சென்று திரும்பியோர் வீட்டை விட்டு வெளியே வந்தால் 50,000 அபராதம்: நாகையில் 3 கிராம மீனவர்களுக்கு எச்சரிக்கை

நாகை: வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று திரும்பியவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று ஒலி பெருக்கி மூலம் நாகையில் உள்ள மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாகையில் 5 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாகையை அடுத்துள்ள அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் ஆகிய மீனவ கிராமங்களில் உள்ள மக்கள் யாரும் நாகை கடைத்தெரு மற்றும் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்கள் சென்று திரும்பியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மீறி வெளியில் நடமாடினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் தொழில் செய்யவும் தடை விதிக்கப்படும். கிராமத்தில் ஒன்று கூடி சீட்டு விளையாடக்கூடாது. சீட்டு விளையாடுவது தெரிய வந்தால் ஒரு நபருக்கு ரூ.20 ஆயிரம் அபராதமும், ஊருக்குள் நுழைய தடையும் விதிக்கப்படும். டூ வீலரில் யாரும் ஊரை விட்டு வெளியே செல்லக்கூடாது. அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் வீட்டில் உள்ள பெண்களை உடன் அழைத்து செல்ல வேண்டும்.

மேலும் யாரும் படகில் சென்று கரையோரத்தில் வலை வீசி மீன்பிடிக்க கூடாது. இதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மற்றும் கல்லாரைச் சேர்ந்த மூன்று மீனவ கிராம பஞ்சாயத்தார்களும் சேர்ந்து முடிவெடுத்துள்ளனர்.  இவ்வாறு எடுத்த முடிவுகளை ஒலிபெருக்கி மூலம் நேற்று கிராமத்தில் உள்ள தெருக்களில் சென்று எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

Tags : foreigners ,home ,returnees ,house ,Naga Away ,Village ,Nagapattinam Fishermen Warning , Overseas, Outlander, Penalties, Nagai, Corona, 3 Village Fishermen
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...